இந்திய தேசத்தின் தென் முனையில் அமைந்திருக்கும், தமிழ்நாடு மாநிலத்தின் எழில்
கொஞ்சும் குமரி மாவட்டத்தில், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
கிராமமான கொடுப்பைக்குழியில் பல உயர் பதவிகளை வகித்து வரும் அதிகாரிகளை உருவாக்கிய
அரசு மேல் நிலை பள்ளி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
அதனுடன் அரசு தொடக்கப் பள்ளியும் சிறப்பாக
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆங்கில மொழி தெரிந்திருந்தால் வேலை வாய்ப்புகளுக்கு
தொடர்பு மொழியாக பயன்படும் என்ற காரணத்தினால், கிராமப்புற மாணவர்களுக்கும் ஆங்கில
வழிக் கல்வி கொண்டு சேர்க்கும் பொருட்டு இந்த கல்வியாண்டு (2016-2017) முதல் LKG,
UKG வகுப்புகளும் 1 முதல் 4 வகுப்புகள் வரையிலும் ஆங்கில வழிக்கல்வி
தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த வகுப்புகளுக்கு ஆங்கில புலமை மிக்க திறமையான ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்தி கற்கும் மாணவர்களுக்கும், தனி
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
LKG, UKG வகுப்புகள் தொடங்கப்பட்ட முதல் வருடத்திலேயே 25 மாணவர்களை
பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்திருக்கிறார்கள். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை
தொடக்கப் பள்ளியிலும் சேர்த்து 96 மாணவர்களாக உயர்ந்து தரமான கல்வியை பெற்று
வருகிறார்கள்.
தரமான ஆங்கில வழி கல்வியை கொடுக்கும் கொடுப்பைக்குழி அரசு
பள்ளியின் இந்த அதிரடி மாணவர் சேர்க்கையால், தனியார் பள்ளிகளை கல்வி தரத்தில்
பின்னுக்கு தள்ளி, கொடுப்பைக்குழி அரசு பள்ளியானது தர வரிசையில் முந்திக்
கொண்டிருக்கிறது என்று கல்வியாளர்களும், கொடுப்பைக்குழி வட்டார மக்களும்
தெரிவிக்கின்றனர்.
இதனால் சுற்றுவட்டார பொதுமக்களும் தங்களது குழந்தைகளை,
கொடுப்பைக்குழி அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும்
பள்ளியில் சேராத மாணவர்களை பெற்றோர்கள், தரமான கல்வியின் தேவையை உணர்ந்து விரைவில்
தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருங்கால தமிழக உயர் அதிகாரிகளாக மாற்ற
வித்திடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வளர்ச்சிக்கு அயராத முயற்ச்சியில் ஈடுபட்ட பள்ளி
தலைமையாசிரியர் திரு. மரியமிக்கேல், ஆசிரியர்கள் மற்றும் கொடுப்பைக்குழி வட்டார
மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பள்ளியானது மேலும் அதீத
வளர்ச்சி பெற வாழ்த்துவதோடு, சுற்றுவட்டார இளைஞர்களும், முன்னாள் மாணவர்களும்
பள்ளி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றவும் அன்போடு விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்
[முன்னாள் மாணவன்]