Tuesday, April 7, 2015

₹30 ல் பிளாஸ்டிக் ஆதார் அட்டை!

ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு 30 ரூபாய் கட்டணத்தில் ஏ.டி.எம் கார்டு வடிவில் ஆதார் அட்டை வழங்கும் சேவை அரசு பொது இ-சேவை மையங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அட்டை கிழியவே கிழியாது என்பதுதான் முக்கிய அம்சமாம்.நாடுமுழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 4.74 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை தண்ணீரில் விழுந்தால் கிழிந்துவிடும் அளவில்தான் உள்ளது.அதனால் ஆதார் அட்டை தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ வேறு அட்டை பெறுவதில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.அரசு இ-சேவை மையங்கள்இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 254 தாலுகா அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று வழங்குவது மற்றும் அரசின் சமூக நல திட்டங்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பதிவும் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. மேலும் பல்வேறு புதிய சேவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு ஏடிஎம் கார்டு வடிவில் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை வழங்கும் சேவை விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏ.டி.எம் கார்டு வடிவில்"ஆதார் அட்டையை வழங்குவதற்கான உரிமத்தை யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி ரூ.30 கட்டணத்தில் பிவிசி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக்கில் வண்ண ஆதார் அட்டை வழங்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை வங்கி ஏடிஎம் மற்றும் பான் அட்டைகளோடு சேர்த்து பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எளிது. இதற்காக யூஐடிஏஐ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 196 பிரிண்டர்கள் சம்பந்தப்பட்ட பொது இ-சேவை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.ரூ.30க்கு ஆதார் கார்டுஆதார் அட்டைக்கு உரியவர் தனது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை பதியும்போது வழங்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு என்று அழைக்கப்படும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே பிளாஸ்டிக் ஆதார் அட்டையை பிரின்ட் செய்ய முடியும். விரைவில் கருவிழி படலத்தை பதிவு செய்து அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபரை அங்கீகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஒரு நபர் எத்தனை அட்டைகளை வேண்டுமானாலும் தலா ரூ.30 கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை வேறு நபர் பெற வாய்ப்பில்லை" என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment