Thursday, October 12, 2017

15 ஆண்டுகளுக்கு பிறகு செப்பனிடப்பட்ட எங்கள் கிராம சாலை!

2001 அல்லது 2002 ல் வாஜ்பாய் பிரதம அமைச்சராக இருந்த காலகட்டத்தில் போடபட்ட சாலை இப்பொழுது 15 ஆண்டுகளுக்கு பிறகு செப்பனிடப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் மகிழ்ச்சிதான். ஆனால் ஒருவகையில் பண இழப்பையும் ஏற்ப்படுத்துகிறது.

எப்படி என காண்போம்.

நான் பிறந்து வளர்ந்த பொன்னாடாம், சூரிய உதயம் காணும் எங்கள் குமரி மாவட்டத்தின், கொடுப்பைக்குழி கிராமத்தில், இப்போது போடப்பட்டிருக்கும் சாலையின் அருகே இருக்கும் வீட்டின் தரை மட்டம், இந்த சாலை செப்பனிடப்பட்டபின் தாழ்ந்துள்ளது என்பது வேதனையளிக்கிறது. சாலையிலிருந்து அண்ணாந்து பார்த்த வீடுகள், இப்போது சாலையின் மட்டத்திற்கு சரிசமமாக இருப்பது மன உழைச்சலை ஏற்படுத்துகிறது.

சாலை சீரமைப்பது, செப்பனிடுவது என்பது, பழைய சாலையின் மேல் மட்டத்தை அகற்றி விட்டு பழைய சாலை இருந்த அதே உயரத்திற்கு புதிய சாலை போடுவதுதான் சரியான விதி. அப்படி செய்தால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் தமிழகத்தில் அதற்கு மாறாக, பழைய சாலையை தோண்டி அகற்றுவதற்கு ஒதுக்கிய பணத்தை செலவளிக்காமல், அதற்கு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஏற்கனவே பழுதாகியிருக்கும் சாலையின் மேல், புதிய சாலை அமைத்துவிட்டு, அரசுக்கு கணக்கு காட்டி விடுகிறார்கள்.

இதனால் அனைத்து சாலைகளின் பக்கத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் சாலையை விட தாழ்வானதாக அமைந்துவிடுகிறது.

அப்படியானால் சாலையானது, வீட்டின் தரைமட்டத்திற்கு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது பொருள். இப்படியே போனால் இன்னும் இரண்டு, மூன்று தடவை சாலை செப்பனிடப்பட்டால் , வீட்டு தரை மட்டத்தை விட சாலை மட்டம் உயரமாக இருக்கும். இது சரியான முறை கிடையாது.

இப்படி சாலை உயரமாக இருப்பதால், மழை காலங்களில் எளிதாக மழை நீர் வீட்டினுள் வருகிறது, வீடு பாதிப்படைகிறது. எனவே வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.

50 வருடங்களுக்கு திட்டமிட்டு கட்டும் வீடு இதே போன்று சாலைகள் அமைத்தால் 25 வருடங்களிலே இடிக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதனால் மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சிபெறும். தனி நபர் வருமானம் வெகுவாக குறையும். ஆட்சியாளர்கள் காசு சுருட்டும் நிலை ஏற்படும். இது நாட்டுக்கே பெரிய இழப்பாகும்.

இதற்கு பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களே காரணம். அவர்கள் இந்த நிலையை உணர்ந்து மக்கள் பண இழப்பை இனிமேலாவது தடுக்க தனது வீட்டுக்கும் இதே நிலைதான் என புரிந்து பொறுப்புணர்வுடன் கடைமையாற்ற வேண்டும்

இவையெல்லாம் மறுக்கப்படும் பட்சத்தில், வளருகிற தலைமுறை இளைஞர்களாவது வீதிக்கு வந்து இது போன்ற மறைமுகமான அநீதிகளை தட்டி கேட்க வேண்டும்.

கேலி கிண்டல்களை குறைத்து களத்திற்கு வர வேண்டும். அரசுகள் அடிமைகளாக இருப்பதை கண்டிக்க வேண்டும். நாம் வாக்களித்த அரசு நமக்கு நன்மை செய்யவில்லையென்றால், அரசை கவிழ செய்யும் அதிகாரம் வாக்களித்த நமக்கே இருக்க வேண்டுமென்று போராட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிபட்ட நாள் வரும்போதுதான் இந்தியா வல்லரசாகும். தமிழ்நாடு தழைக்கும்.

தமிழ்நாடு முழுதும் இதே நிலை நீடிப்பதை தடுக்க நாம் என்ன செய்ய போகிறோம்.

ஒரே வழி நல்லவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் கொடுப்பது....

சிந்திப்பீர்களா?

ஊர்பாசத்துடன்,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment