Monday, July 27, 2015

அன்னை தமிழகத்தை அலை திரளாக அகிலமெங்கிலும் பரப்பிய அணுவை துளையிட்ட அப்துல் கலாமிற்கு கண்ணீரில் எழுதிய இரங்கற்பா!

இந்தியரை உலக உச்சாணியில் ஏற்றி வைத்து, இப்போது ஏங்க வைத்த ஏவுகணை நாயகனே உலக மக்களின் கன்ணீரிற்கு நாயகனாகிவிட்டீரே!

பட்டித்தொட்டியில் பிறந்து பாமரனாய் வீட்டில் வளர்ந்து பாகுபாடின்றி பகுத்துணர்ந்து பல கண்டங்களை கண்டதனால்தான் காவியமானீரோ?

கனவு காணுங்கள் என்று சொல்லி கொடுத்த மேதை இப்போது மேகங்களில் மறைந்து விட்டார். அவர் சொன்ன அந்த கனவிலாவது அவரை காணுவோமோ?

2020 என்று சொல்லி வல்லரசாவதற்கு முன்னரே இந்த வல்லாதிக்க ஆட்சியை கண்டு மனம் பொறுக்காமால் நீவிர் மெளனித்தது ஏனோ?

உமது திட்டங்களை இந்தியம் நிறைவேற்றுமா என்று ஏக்கத்துடனே எங்களை ஏங்க வைத்துவிட்டு ஏகலவனிடம் ஏணி படியேறி சென்றது ஏனோ?

சிறு பிள்ளை முதல் படுக்கை பாட்டி வரை உமது பெயரை உச்சரிக்க வைத்துவிட்டு, எங்கள் நாவிற்கு ஓய்வு கொடுக்க நீர் ஓய்வெடுத்தீரோ?

அன்பிற்கு இலக்கணமாய், அகிலத்தையும் ஆட்கொண்டு, எங்கள் இதயத்தை ஆக்கிரமித்து, அநாதையாய் எங்களை ஆர்ப்பரிக்க விட்டதேனோ?

அணுவை கொண்டு ஏழு கடலை தாண்டி ஏவுகணை செதுக்கிய நீவிர் சிலாங்கிலே சினம் கொண்டு ஏவுகணைகளை ஏங்க வைத்தது ஏனோ?

குழந்தைகளிடத்தில் இறைவனை கண்டு அவர்களை ஊக்கப்படுத்திய உன்னதமான நீவிர், அக்குழந்தைகளுக்காக இன்னொரு முறை வருவீரோ?

வல்லாதிக்க நாடுகளை கொலைநடுங்க வைத்து போக்ரான்-II மூலம் மூலை முடுக்கெல்லாம் செலுத்தமுடியும் எந்று நீவே ஏவுகணையானீரோ?

உலகமே உமை கண்டு வியக்கும்படி நீவிர் உருவாக்கிய உம்மை, உலக மக்களையெல்லாம் உறங்காமல் உளர வைத்ததேனோ?

அணுவை செதுக்கி சிறை பிடித்து, சிற்பமாக்கி, சீனாவை சினங்கொள்ள வைத்தவரே, எங்கள் சிந்தனைகளை சிதறவைத்ததேனோ?

மாணவர்கள் மல்லாந்து படுக்க, கனவுகளை கண்ணயராமல் காண, கற்று கொடுத்த கோமானே, எங்களை கையொடிந்த பறவைகளாக்கியதேனோ?

கற்று தந்த பாடங்கள் கலாம் பெயரை சொல்லும் போது காலம் காலமாய் கையெடுத்து கும்பிட என்னை கவிஞராய் உமக்கு கவிபாட வைத்தீரோ?

அகிலமே உம்மை போற்ற, எங்களை பொற்குவியலில் அடைத்து விட்டு, வெண்குகையில் நீவிர் தஞ்சமடைந்து தவிப்பதற்கு என்ன காரணமோ?

உலகமே உற்றுப்பார்த்த உன்னதர் உம்மை அணுவின் பெயரால் அகிலமே போற்ற ஆறடி ஆழத்தில் அமைதியாய் ஒய்வெடுக்க ஆயத்தமானீரோ?

கடல் பரந்த தேசமெங்கும் உமது கொள்கை பரவட்டும், இந்தியாவின் இறைமையை போற்றட்டும், தமிழராய் எங்களை தலை நிமிர செய்யட்டும்,

தமிழால், தமிழரால், தமிழுக்காக உமது புகழ் பெருகட்டும். உலகமே உமது நாமத்தை போற்றட்டும். புகழ்பெற்ற உம் ஆன்மா இறவன் புகழில் சேரட்டும்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, July 21, 2015

3 தமிழர்களுக்கு கருணை காட்ட கூடாது என வாதிட்ட மத்திய அரசுக்கு கண்டனம்!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற அரசியல்  சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, இந்த மனு எந்த அடிப்படையில் விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர்  ரஞ்சித் குமார், சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில், முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டக் கூடாது என்றும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சாந்தன், முருகன் தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 24 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே என்றும் வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

நிரபராதிகளை உச்சநீதிமன்றமே கடந்த ஆண்டு விடுதலை வழங்கிய பிறகும், மத்திய அரசு விடுவிக்காமல், கருணைகாட்ட கூடாது என கூறியிருப்பது மனித நேயமற்ற செயலாகும். இதனால் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதோடு, 3 தமிழர்களுடன், மொத்தமாக 7 தமிழர்களையும் மத்திய அரசு விடுவிக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, July 17, 2015

உறவுகள் அனைவருக்கும் புனித ரமதான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அகிலமெங்கும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள், ரமதான் காலங்களில் காலை முதல் மாலை வரை உண்ணாமல் அருந்தாமல் பசி தாகங்களை பொறுத்துக்கொண்டு விரதம் மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

இஸ்லாமியப் பெருமக்கள், விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன் மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர். அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். எனவே சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்

இஸ்லாமியப் பெருமக்கள் இனிய ரமலான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, குடும்பத்தில் சந்தோசம் ஒளிர  ரமதான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல, பள்ளிப் பாடத்தில் தவறான கேள்வி - பதில்! உடனே நீக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

தொன்மைத் தமிழ் மொழியின் மாண்பினைக் காக்கவும், தமிழர்களின் நெடிய நாகரிகம், பண்பாட்டில் அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பை தடுக்கவும், 1937 ஆம் ஆண்டு முதல் இந்தித் திணிப்பை எதிர்த்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் கடுமையாகப் போராடினர். 1965 இல் மூண்டெழுந்த மொழிப்போரில் இலட்சக்கணக்கான மாணவர்கள் போலீசுக்கும் இராணுவத்துக்கும்அஞ்சாது வீதிகளில் இறங்கிப் போராடினர். எட்டுத் தமிழர்கள் தீக்குளித்து மடிந்தனர். கணக்கற்றோர் அடக்கு முறைக்குப் பலியானார்கள். 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்திக்குத் தமிழகத்தில் இடம் இல்லை; தமிழும் ஆங்கிலமும் மட்டுமே’ என சட்டமன்றத்தில் பிரகடனம் செய்தார்.

இந்நிலையில், 2015௧6 ஆம் கல்வி ஆண்டில் வெளிவந்துள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில்பக்கம் 329 (ஆங்கில வழிக் கல்வி பக்கம் 306) இல் இந்தியாவின் தேசியமொழி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதில் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பதில்களுள் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளனர். ‘இந்தி’ என்ற பதிலைத் தேர்வு செய்யுமாறு ஆசிரியர்கள் கூறி உள்ளனர். இது மிகத் தவறான வழிகாட்டுதல்ஆகும்.

இந்தக் கேள்வி தேசிய ஒருமைப்பாடு என்ற பாடப்பிரிவின் கீழ்வருகிறது. ஆனால் இப்பாடத்தில் எந்த இடத்திலும் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பாடத்தின் இறுதியில் மேற்கண்டவாறு கேள்வி கேட்டு மாணவர்களைக் குழப்பி உள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்தியாவின் தேசிய மொழிஎன்று எந்த மொழியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியும், ஆங்கிலமும் அரசு இந்திய அரசின் அலுவல் மொழிகள் மட்டுமே. இந்தியாவிலேயே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டது தமிழ்நாடு மட்டும்தான். பிற மாநிலங்களால் இந்தித் திணிப்பைத் தடுக்க முடியாமல் போனது. இன்று அம்மாநிலங்கள் தங்கள் சொந்த மொழிகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன.

இந்தியாவில் இந்தி மட்டுமே பேசப்படுகிறது என்ற மாயை, உலகம் முழுவதும் இந்திய அரசால் பரப்பப்பட்டு வருகிறது. இந்திய அரசின் இந்தப் பொய்ப் பரப்புரையை தமிழ்நாடு மட்டுமே இன்றுவரைகடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தமிழக மாணவர்களை நம்ப வைக்கின்ற விதத்தில், மேற்கண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. தமிழக அரசு உடனடியாக இந்தக் கேள்வியை நீக்க வேண்டும்; தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த தகவல்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, July 15, 2015

காமராஜர் பிறந்த நாளில் அவரது சாதனைகளை பரப்புரை செய்வோம்!

ஒருமுறை காரில் பய‌ணம் செய்து கொண்டிருந்த காமராசர் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.

காரை நிறுத்த சொல்லி, அந்த சிறுவனை அழைத்து "ஏன் தம்பி, பள்ளிக்கூடம் போகலையா? என்று கேட்டார்.

காமராசர் முதலமைச்சர் என்பதை அறியாத சிறுவன் " பள்ளிக்கூடம் போனா சோறு யார் போடுவாங்க? என்று கேட்டான்.

"சோறு போட்டா பள்ளிக்கூடம் போறியா? என்று கேட்டதற்கு " போறேன்" என்றான் சிறுவன்.

உடனே பள்ளிகளில் "மதிய உணவுத் திட்டம்" கொண்டுவந்தார் காமராசர். அப்படி கல்விக்கு முக்கியத்துவம் தந்தார் கல்வித் தந்தை காமராசர். அவரது பிறந்த நாளில் அவரது சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, July 14, 2015

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை கொடுத்தவர் இசையோடு கலந்துவிட்டார்!

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாநதன், ‘நீராடும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.சுமார் 1200 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 87 வயதான எம்.எஸ்.விஸ்வநாதன் சமீபகாலமாக முதுமை காரணமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று அதிகாலை மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.பழம்பெரும் இசையமைப்பாளரான எம்.எஸ்.வி.யின் சாதனைகள், பெருமைகள் ஏராளம். அவற்றில் ஒன்று தான் தமிழ்த் தாய் வாழ்த்திற்கு இசையமைத்தது.தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு எம்.எஸ்வி. மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்திருந்தார். இந்தப் பாடலை ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜனும், இசையரசி பி.சுசீலாவும் இணைந்து பாடினார்கள்.இந்தப் பாடலே இன்றளவும் பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

அப்படிபட்ட இசை மாமேதை இழப்பு உலகமெங்கும் வாழும் இசை உணர்வாளர்களுக்கு பேரிளப்பாகும். அன்னார் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.


மறுமலர்ச்சி மைக்கேல்