Monday, March 7, 2016

ஈழ அகதி தற்கொலைக்கு காரணமாயிருந்த வருவாய் துறை அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டி கூத்தியார் குண்டு இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகின்றன.

மாதத்திற்கு 3 முறை அகதிகள் இருக்கை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று 06-03-2016 காலையில், அகதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் முகாமிற்கு சென்றுள்ளார். அப்போது ரவீந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ரவீந்திரனின் மனைவியை கண்டித்துள்ளார் வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன். அப்போது, ரவீந்திரன் அங்கு வந்துள்ளார்.

தனது மகனை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார். ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரவீந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த ரவீந்திரன், ஐயா உங்கள் காலில் விழுகிறேன், என்னை மன்னியுங்கள், எனிமேல் தவறு நடக்காது என மிக பணிவோடு வருவாய் துறை அதிகாரியிடம் கெஞ்சியுள்ளார். ஆனாலும் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார் வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன்.

இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அந்த அதிகாரி, “இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு” என கூறியிருக்கிறார்.

இதனால் மனமுடைந்த ரவீந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். என்னைப்போல் இந்த முகாமில் யாரும் இனிமேல் பாதிக்க கூடாது, என்னை போல யாரும் அவமானப் பட கூடாது என்று, மின்னழுத்த மின்சார கம்பியை காலால் தொட, உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் தீ பிளம்பு போல வெடி வெடித்தது போல அவரது உடல் சிதறி கீழே விழுந்து ரவீந்திரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

எனவே, இந்த இறப்புக்கு காரணமாயிருந்த வருவாய் துறை அதிகாரியையும், துணை போன தமிழக ஜெயலலிதா அரசையும் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் வருவாயய் துறை அதிகாரியை பணி நீக்கம் செய்வதோடு, இறந்த ரவீந்திரன் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணமும், மகனுக்கு சரியான மருத்துவமும் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழீழத்தில் இனப்படுகொலை நடந்ததால், தாயகமான தமிழகத்திற்கு தஞ்சமடைந்தனர். ஆனாலும் இங்கும் அவர்களை சுதந்திரமாக வாழ விடாமல் சிறை போன்ற முகாம்களில் அடைத்திருப்பது கொடுமை செய்வது போன்ற வேதனையான விடயம் ஆகும்.

இனப்படுகொலை என தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றிவிட்டு, இங்கேயும் படுகொலைக்கு துணை போவது போன்ற சூழ்நிலை காணப்படுகிறது, தமிழகத்திலே தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்த்துகிறது. இந்த நிலையை அரசுகள் மாற்ற வேண்டும்.

அவர்களும் மனிதர்களே என்னும் அடிப்படையில் அவர்களுக்கு திறந்த வெளி முகாம் அமைத்து அவர்களும், இந்திய பிரஜையை போல சுதந்திரமாக வாழவும், தமிழக அரசு உடனே தலையிட்டு அனைத்து வசதிகளையும் தமிழீழ அகதிகளுக்கு செய்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment