Saturday, February 28, 2015

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிறிஸ்தவ ஊழிய கட்டடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவர், அனுமதியில்லாமல் இயங்கும் தீங்கு விளைவிக்கும் பன்றி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிராமத்தின், குட்டிமாந்தட்டு மடை பகுதியில், சடையால் புதூர் செல்லும் சாலையில், ஒரு கிறிஸ்தவர் தனது சொந்தமான நிலத்தில், சிறிய வீடு கட்டி குடிபுகுந்துள்ளார். தனது வீட்டின் மறு பகுதியில் வெளிபுறத்தில் சிறிய தொழுகை இடத்தையும் உருவாக்கி வயோதிபர்களுக்காக, குடும்ப வறுமையில் கக்ஷ்டபடுபவர்களுக்காக, மற்றும் பல்வேறு பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு ஜெபித்து வருகிறார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும் அதை விரும்பும் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஊழியத்தை செய்து வரும் இவர் மக்கள் அதிகமாக வருவதால் சிறிய அளவிலான பெந்தேகோஸ்தே சபை போல விரிவு படுத்துகின்ற நிலையில், குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள் தமிழக காவல்துறை உதவியுடன் அந்த தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்று, இப்படிபட்ட ஊழியங்களின் கட்டடங்களுக்கு தாங்கள் அனுமதி வாங்கவில்லையென்று கூறி அதை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் சார்ந்திருக்கும் பாஜக வின் கொள்கைகளை பறைசாற்றுகின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

இப்படிபட்ட கிறிஸ்தவ ஊழியங்களை நடத்த கட்டடங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அதை தடுக்கும் பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள், எந்த வித அரசு அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக, பலமுறை பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகும் கடந்த ஒரு வருட காலமாக கொடுப்பைக்குழி ஊரின் ஒரு பகுதியில் இயங்கிவரும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பன்றி பண்ணைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? பலமுறை பொதுமக்கள் மனுகொடுத்தும் பொதுமக்களின் மனுக்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வது ஏன்? பன்றி பண்ணையை பற்றி பஞ்சாயத்து தலைவர் வாய் திறக்காமல் மெளனமாக உலாவருவது ஏன்? பன்றி பண்ணை முதலாளிகளிடம் விசுவாசமாக இருக்கிறாரா? அவரோடு சேர்ந்து அவரின் கூட்டாளிகளையும் பன்றி பண்ணைக்கு எதிராக போராட விடாமல் தடுக்கிறாரா?

ஊர் நன்மைக்காக போராட்டத்தில் முனைப்போடு பணியாற்றுகின்ற இளைஞர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்த பன்றி பண்ணை முதலாளிகளை கண்டித்து வழக்கை திரும்ப பெற செய்யாதது ஏன்? சொந்த ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சொந்த ஊரிலே நிகழும் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சொந்த ஊர் மக்களையே காப்பாற்ற முடியாத பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி குருந்தன்கோடு பஞ்சாயத்து முழுவதுமுள்ள பகுதி மக்களை எப்படி காப்பற்றுவார்? சிறிய பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியாத தலைவரின் தகுதிதான் என்ன?

இவ்வளவு கண்டனங்களுக்கு பிறகும் அதிகாரிகளையும் தன் வசமாக்கி பன்றி பண்ணையை அகற்றாமலிருக்கும் திரு.வைகுண்டமணி அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தி தமிழக அரசு அவரது தலைவர் பதவியை பறிக்க வேண்டுமென்று முக நூல் வாயிலாக் வேண்டுகோள் வைக்கிறேன்.

அடுத்த தேர்தலில் இவர் போன்ற தலைவர்களுக்கு மக்கள் பணம் பாராமல் பொதுமக்கள் நலம் சார்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதாவது இவரை போன்றவர்களுக்கு புத்தி தெளிகிறதா என பார்ப்போம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம்.....

மறுமலர்ச்சி மைக்கேல்.

Wednesday, February 25, 2015

ஜெசிகா-வின் தமிழின உணர்வு!

தமிழீழ சிறுமி ஜெசிகா மற்றும் ஜெசிகா-வின் தகப்பனாரின் தமிழின உணர்வு வெளிப்பட்டிருக்கின்றது, இந்த இன உணர்வு தமிழனை தவிர, தமிழ் இனத்தை தவிர வேறு எந்த இனத்துக்கும் கிடையாது. தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து சொல்லுவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

அன்னை தெரசாவை கொச்சைபடுத்திய மோகன் பகவத்-க்கு கடுங்கண்டனம்!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை  செய்தார் என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது; அவரது சேவையை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பகவத்தின் இந்த பேச்சு கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துகொள்கிறேன்.

அன்னை தெரசா என்றாலே அவரது தன்னலம் கருதாத சேவை தான் நினைவுக்கு வரும். அவர் மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்தவர். அதனால் தான் மதம், மொழி, இனம் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் எந்த தொடர்பும் இல்லாத இந்தியாவுக்கு வந்து சேவை செய்தார். தாய், தந்தையை கடுமையான நோய் தாக்கிவிட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளே முன்வராத இந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தமது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து கவனித்துக் கொண்டார். இப்படிப்பட்ட சேவை செய்தவரை மோகன் பகவத் அறியாதிருப்பது துரதிஸ்டவசமானது. அவரின் சேவைக்கு மோகன் பகவத் இப்படியாக அவதூறு கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற பொது கூட்டங்களில் மக்களின் மனதை வென்றவர்களை இனிமேலாவது மோகன் பகவத் போன்றவர்கள் நிறுத்து கொண்டு மக்கள் தொண்டாற்றவேண்டுமென கேட்டு கொள்கிறேன். இப்படி பேசுபவர்களை மத்திய பாஜக அரசு கண்டிக்காமலிருப்பது இந்து மத கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பது போல இருக்கிறது. எனவே மத்திய அரசானது இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்க வேண்டுமென்றும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Saturday, February 21, 2015

உலக தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள் !

தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு போற்றி பயன்படுத்தப்பட வேண்டிய மொழி. அன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல, அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும். தாய் மொழிதான் மனித வாழ்க்க முறையை கலாச்சாரத்தை கற்றுகொடுக்கிறது. ஓவ்வொரு மனிதனும் மிகப்பெரிய உலகம் போற்றும் தலைவர்களாக வலம் வருகின்றார்களே அவர்களெல்லாரும் தாய்மொழியின் சிறப்பை உணர்ந்து பணியாற்றினார்கள். தாய் மொழியாம் தமிழை போற்றிய திருவள்ளுவர் உலக பொதுமறையாம் திருக்குறளை நமக்கு அருளி நம் தாய் உணர்வை தீவிரபடுத்தியிருக்கின்றார். எனவே தம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழியை மதித்து, தமிழை உலகறிய செய்ய உறுதி ஏற்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Friday, February 20, 2015

தமிழீழத்து ஜெசிகா இரண்டாவது இடத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் வெற்றி!

தமிழீழத்து தங்கை ஜெசிகா இரண்டாவது இடத்தில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4-ல் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு நன்றி நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.வெற்றி பெற்ற முழு தொகையையும், ஒரு பகுதி சென்னையில் உள்ள குழந்தை காப்பகத்துக்கும், மீதமுள்ள முழுவதையும் தமிழீழத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்பளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தைரியமும், கொடையுள்ளமும் யாருக்கு உண்டு தமிழனை தவிர.... 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Sunday, February 15, 2015

தமிழக அரசே! பன்றி பண்ணையை அகற்றாத பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்!

குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தின், பொதுமக்கள் தினசரி உபயோகிக்கும் ஒட்டாங்குளத்தின் கரையில் அரசு அனுமதியில்லாமல், சட்டவிரோதமாக தனியாரின் பன்றி பண்ணை இயங்கி வருகிறது. இதை பல முறை பஞ்சாயத்து தலைவரிடம் எடுத்து கூறியும், செவிடன் காதில் சங்கு ஊதியது போல பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி நடந்துகொள்கிறார். 

பஞ்சாயத்து தலைவரின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இன்னும் காலம் தாமதிக்காமல் பண்ணையை அகற்றும்படியும் வலியுறுத்துகிறேன்.எனவே பன்றி பண்ணையால் வரும் நோய்களை தடுக்க நாம் சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.

பன்றி காய்ச்சலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? 
ஐந்து ஆண்டுகளுக்கு முன் காய்ச்சல், சளி வந்தாலே எல்லோரும் பயந்தார்கள். அரசு அறிவித்த ஆய்வகங்களுக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள நீண்ட வரிசை காத்திருந்தது. பொது இடங்களுக்கு முகமூடி அணியாமல் வரப் பலரும் பயந்தார்கள். அன்று அப்படி மக்களைப் பயமுறுத்திய காய்ச்சல், ‘ஹெச் 1 என் 1’ என்று பெயர் சூட்டப்பட்ட பன்றி காய்ச்சல்தான்.
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மெக்சிகோவில் தோன்றிய அந்தக் காய்ச்சலைப் பார்த்து உலகமே பயந்தது. இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அன்று அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் பயந்தார்கள்.
காய்ச்சல் அசட்டை
இன்றைக்கோ ஆந்திரா, தெலங்கானா எனத் தமிழகத்தின் அருகாமை மாநிலங்களில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரிந்தும்கூட, மக்களிடையே பெரிய அளவில் எச்சரிக்கை விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.
இதைச் சாதாரணப் ஃபுளு காய்ச்சல் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காய்ச்சல் வந்தால் டாமி ஃபுளு மாத்திரை சாப்பிட்டால் போதும், அதேநேரம் காய்ச்சல் வந்தால் மருந்துக் கடைக்குச் சென்று தாங்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் பொது மருத்துவத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதெல்லாமே முன்னெச்சரிக்கைகள்தான், வேறு எப்படிப்பட்ட எச்சரிக்கைகள் தேவை?
கூடுதல் கவனம் தேவை
"பொது இடத்தில் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அதன் மூலம் வெளியேறும் வைரஸ் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பு உள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், கைகுலுக்குகிறோம். ஏற்கெனவே, சிலர் பயன்படுத்திய சில பொருட்களை நாமும் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
அதனால்தான் பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாகக் கழுவச் சொல்கிறோம். முகமூடி அணியச் சொல்கிறோம். இது பன்றி காய்ச்சலுக்கு மட்டுமில்லை. பொதுவாகப் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைதான்" என்கிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை ஆர்.ஜெயந்தி.
பன்றி காய்ச்சலுக்குச் சொல்லப்படும் அறிகுறிகள் பொதுவாகச் சொல்லப்படும் காய்ச்சல் அறிகுறிகளைப் போன்றவைதான். அதனால், எந்தக் காய்ச்சல் வந்தாலும் நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று மருந்து வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒரு வேளை பன்றி காய்ச்சலாக இருந்து நாமே மருந்து வாங்கிச் சாப்பிட்டு அசட்டையாக விட்டுவிட்டால், நோய் முற்றிய நிலைக்குச் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. பன்றி காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்தப் பரிசோதனை
இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற எல்லாமே பொதுவான அறிகுறிகள் தானே? அப்படியானால் எந்தெந்த அறிகுறிகளைக் கண்டு பன்றி காய்ச்சலுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? "தொடர்ந்து 4, 5 நாட்கள் காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுபோக்கு போன்றவை இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சாதாரணக் காய்ச்சலுக்கும் பொருந்தக்கூடியதுதான்.
எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரைப் பார்க்கும்போது ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். அதன்மூலம் பன்றி காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்" என்கிறார் ஆர். ஜெயந்தி.
குழந்தைகள் கவனம்
பெரியவர்கள்கூட எச்சரிக்கையுடன் இருந்து விடுவார்கள். ஆனால் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. பெரியவர்களுக்குச் சொல்லப்படும் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
காய்ச்சல், சளி இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். எந்த வகை காய்ச்சல், சளியாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுக்க, இது உதவும் என்கிறார்கள். 

மறுமலர்ச்சி மைக்கேல்.