Saturday, January 14, 2017

சல்லிகட்டுக்கு ஆர்ப்பாட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் தாக்குதலுக்கு கண்டனம்! காவல்துறையை வசம் வைத்திருந்த முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி இன்று 14-01-2017 அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமனை காவல்துறையினர் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்திருக்கின்றன. இதை காணொளியாக காணும்போது தமிழினமும், தமிழனும் ஒடுக்கப்படுவதாகவே உணருகிறேன்.

என்னுடைய கேள்வி முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு... முதல்வர் அவர்களே! சல்லிகட்டை தமிழ்நாடு உறுதி செய்யும் என்று சொன்ன உங்கள் வீரவசனம் என்ன ஆயிற்று. குறைந்த பட்சம் உங்களிடம் வைத்திருக்கும் காவல் துறையையாவது அமைதியாக இருக்க வைக்க உங்களிடம் திராணி இல்லையா?

நீங்களும் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல பேசி, தமிழினத்தையே ஒடுக்க நினைக்கிறீர்களா? முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டாலே தீதும், சூதும் கை வந்த கலை என நிரூபிக்க முற்ப்படுகிறீரா?

கையாலாகாத முதல்வர் என்று நினைத்த முதல்வர் அதிரடியாக சல்லிகட்டு நடக்கும் என அறிவித்ததை வரவேற்ற 7.5 கோடி தமிழர்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு இந்த தடியடிதானா?

இதில் சாஸ்டாங்கம் விழுவதற்கு வித்தியாசமான விளக்கம் வேறு... உங்களை போன்ற அடிமைகள் அதிகாரத்தில் இருக்கும் வரை தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்கு சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.

தமிழர் பண்பாட்டுக்காக போராடிய இயக்குநர் கவுதமனை காட்டுமிராண்டி போல இழுத்து அங்குமிங்குமாக அலைகழித்து அடித்து துன்புறுத்திய தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காட்டுமிராண்டிதனமாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தடியடி நடக்க காரணமாயிருந்த, காவல்துறையை தன் வசம் வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழர்களை, பண்பாட்டை கலாசாரத்தை, உணர்வுகளை ஒடுக்க நினைத்த தமிழக முதல்வர் தனது வாக்கை காப்பாற்றாமல் துரோகம் இழைத்த காரணத்தால் தார்மீக உணர்வின் அடிபடையில் தனது இயலாமையை ஒப்புகொண்டு பதவி விலக வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

தமிழர்கள் வரும் காலங்களிலாவது இப்படிபட்ட துரோகங்களை தேர்தல் காலங்களில் நினைத்து பார்த்து தன்மானமுள்ளவர்களை, தமிழினத்தையும், தமிழர் நலன் காக்கிறவர்களை இனம் கண்டு வெற்றியடைய செய்து தமிழினத்தை இப்படிபட்ட துரோகங்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு தமிழனாக,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment