Friday, January 16, 2015

மாட்டுப் பொங்கல் திருநாள்...

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் புதியது போல சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி அலங்காரம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். இதே நாளில்தான் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டும் நடைபெறும்.
இவ்வாறாக தமிழரின் பண்பாட்டு நாகரீகம் காக்க படுகிறது. இதை அனைவரும் மனதிலே ஏற்றுகொண்டு அனைத்து வருடமும் கொண்டாடி மகிழ வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Thursday, January 15, 2015

ஜான் பென்னி குக் என்பவர் யார்? எதற்காக முல்லை பெரியார்-ஐ கட்டினார்?

ஜான் பென்னி குக் என்பவர் எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணி செய்துவிட்டு பொதுப்பணி துறை பொறியியல் வல்லுனராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதை கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார். வெறுமனே வைகை நதியை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த இவற்றை எப்படி பசுமையாக்குவது என யோசித்தார்.

அப்பொழுது தான் அவர் கண்களில்  முல்லைப்பெரியார் நதிபட்டது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கும் அந்நதியை திசை திருப்பி கிழக்கு நோக்கி பாயவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை முதலிய பகுதிகளை பசுமை போர்த்திய பூமியாக மாற்றிவிடலாம் என உணர்ந்து  களத்தில் இறங்கினார் பென்னி குக். ஏற்கனவே ராமநாதபுரம் ராஜா தன்னுடைய தளபதி முத்து அருளப்ப பிள்ளையிடம் கேட்டு முடியாது என்று ஒதுக்கப்பட்ட யோசனை அது.

பென்னிகுக் மனம் தளராமல் திட்டம் தீட்டினார். ஜான் ரைவ் என்கிற பொறியியல் வல்லுனருடன் விவாதித்தார். அறுபத்தி இரண்டு லட்சம் அணை கட்ட செலவாகும் என்று அறிக்கை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் கொடுத்தார்.

"இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தப்பகுதி முழுக்க செழிப்படையும் ; திட்டம் நிறைவேறினால் உலகத்திலேயே மிக அழகான மகிழ்ச்சி தரும் சுற்றுலா மையமாக இது மாறும் சாத்தியமும் உள்ளது. இதுவே என் கனவு !" என்று அறிக்கையில் குறிக்கிற அளவுக்கு அவர் மனதெல்லாம் இந்த திட்டம் பொங்கிக்கொண்டு இருந்தது. பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்; வரி வசூல் செய்யலாம் அவர் சொன்னதும் அனுமதி கொடுத்தது அரசு.

பணிகள் தொடங்கி வேகவேகமாக நடந்து பாதி பணிகள் முடிந்த பொழுது  காட்டாற்று வெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போயிற்று. ஆனால், பென்னி குக்கின் நம்பிக்கையை அது அசைக்கவில்லை. அரசிடம் உதவி கேட்டார். அரசு மறுத்தது.

கப்பலேறி ஊருக்கு போனார். இருக்கிற சொத்துக்களை எல்லாமும் விற்றார். மனைவியின் நகைகள், வீடு எல்லாமும் விற்கப்பட்டது. எந்த அளவுக்கு வறுமை அவரை ஆட்க்கொண்டது என்றால், எப்படி தமிழர்களுக்கு தாலியோ அதுபோல ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் படுக்கும் கட்டில்... அதையே விற்று செலவுச் செய்கிற அளவுக்கு எதுவுமே இல்லாத நிலைக்கு வந்தார். ஆனாலும் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். தொன்னூறு அடி நீளமுள்ள தேக்கு மரங்களை வெட்டிப்போட்டு ரோப்வேக்களை அமைத்தார். பல நூறு பேரின் இறப்பு, காலரா, மலேரியா என்று எத்தனையோ சிக்கல்கள் துரத்திய பொழுதும் மனம்தளராமல் செயல்பட்டார் அவர்.  அவ்வப்பொழுது சாதி ஒழிப்பை வலியுறுத்தி கலப்பு திருமணங்களும் செய்து வைத்தார். எட்டு வருட உழைப்பில் உருவானது முல்லை பெரியாறு அணை.  பென்னி குக்கின் நிலை அப்பொழுது எப்படி இருந்திருக்கும் என சொல்லவேண்டாம் - அவரே சொல்கிற வரிகள் இவை...

"இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே முறை; எனக்கு செய்ய கிடைத்த நல்ல செயலை நான் அலட்சியப்படுத்தவோ, தள்ளிப்போடவோ கூடாது!"என்றார்.

2.23 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை இன்றைக்கு காத்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய அவருக்கு சிலை வைத்து தெய்வமாகவே வழிபடுகின்றனர் அப்பகுதி மக்கள். எத்தனையோ பிள்ளைகள் இங்கிலாந்தில் பிறந்த அவரின் பெயர் தாங்கி அப்பகுதிகளில் வளர்கிறார்கள். அறுபத்தைந்து லட்சம் மக்களின் குடிநீர் தேவை தீர்த்த வள்ளல் அல்லவா அவர் ? அப்படிபட்ட மாமனிதனின் பிறந்த தினம் இன்று. அவரின் பிறந்த தினத்தை அப்பகுதி மக்கள் சிலை வைத்து கொண்டாடி மகிழுகிறார்கள். அவர்களோடு நாமும் இணைந்து அனைத்து தமிழர்களும் பொங்கல் பண்டிகையோடு சேர்த்து கொண்டாட வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்...

தமிழ் நாள் காட்டியில் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழர்கள் அனைவருமே புதுப்பானைகளை வாங்குவர். வசதிபடைத்த பலர் புத்தாடைகளையும் வாங்கி உடுத்தி மகிழ்வர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு முற்றத்தை முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.

எனவே தமிழர்களாகிய நாம் அனைவருமே பொங்கல் தினத்தில் புன்னகையோடு இனைப்பை அனைவருக்கும் பரிமாறி அன்பை அனைவரிடத்திலும் ஓங்க செய்ய வேண்டும். தமிழரின் திருநாளிலே அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தி மக்களை சுறுசுறுப்பாக்குவதோடு அனைத்து மக்களுமே ஒருவருக்கொருவர் கலந்துரையாட வாய்ப்பாகவும் அமையும். இந்த தினத்திலே அனைவருமே அன்பை வளர்க்கவும் உறுதி ஏற்போம். சூரிய திசையை நோக்கி பொங்கலிடும் நாம் அனைவருமே ஆனந்தத்தில் பொங்குவோம். அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Wednesday, January 14, 2015

போகி பண்டிகை..

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். இந்த தினத்தை கொண்டாடும் நாம், வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்கி மகிழ்ச்சியாக கடைபிடிக்க வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
 
மறுமலர்ச்சி மைக்கேல்...

Monday, January 12, 2015

கொடுப்பைக்குழி வட்டார மக்களின் ஒரே கிளப், ஒற்றுமை ஓங்கவே....

கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்கள் சார்பாக ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் இயங்கி வருகிறது. இதில் இளம் விளையாட்டு வீரர்கள், ஆலோசகர்கள் மற்றும் சக உறுப்பினர்கள் என ஏறக்குறைய 300 பேர் உள்ளனர். இந்த கிளப்-ல் மட்டைப்பந்து பிரதானமாக  விளையாட்டாக இருந்தாலும், கபடி, சிலம்பாட்டம், மற்றும் நாட்டுபுற, உடல் ஆரோக்கியத்திற்கான அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் ஊக்கமளித்து திறமையானவர்களை உருவாக்கி வருகிறது. 

இந்த கிளப்-ஆனது விளையாட்டுகளை மட்டும் ஊக்குவிக்காமல், உடல் சார்ந்த, பொது நலன் சார்ந்த அனைத்து சேவைகளிலும் ஈடுபடுகிறது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பொது கூட்டங்கள், கலாச்சார மேடைகள், பள்ளிகளின் சுற்றுபுறத்தை தூய்மை படுத்துதல், பொதுமக்களுக்காக போராடுதல், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை செயற்படுத்துதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் உறுப்பினராக உள்ள அனைவருமே கொடுப்பைகுழி வட்டார பகுதியை சார்ந்த திறமை மிக்க வருங்கால தூண்கள். 

இந்த கிளப்-ஆனது கொடுப்பைகுழி வட்டார மக்களை கொண்டு இயங்குவதால் மேலும் கிளப் தொடங்கினால், கொடுப்பைக்குழி வட்டார மக்களை கூறுபோடுவது போல வெளி மக்களுக்கு தென்படும். எனவே அனைத்து மக்களும் எந்த வித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்து, சில குறைகள் இருந்தால், குழுவாக கூடி ஆராய்ந்து, பொதுமக்கள் குறைகளை எடுத்து சொல்லி, நிவர்த்தி செய்து அனைவருக்கும் பயன்படும் வகையில் நமது கொடுப்பைகுழி வட்டாரத்தை முன்மாதிரியாக மாற்ற கை கோர்ப்போம்.

வெற்றி நமதே...

மறுமலர்ச்சி மைக்கேல்...

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை- க்கு இடையே பாலம், மத்திய அமைச்சருக்கு நன்றி

திருவள்ளுவர் திருப்பயண தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஸ்ணன் அவர்கள் தமிழக அரசு அனுமதி வழங்கினால், குமரிக்கண்டத்தில் உள்ள கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை-க்கும், அதன் அருகில் அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கும் இடையே பாலம் அமைத்து கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் இதற்கான நிதியும் தயாராக உள்ளதாகவும் அனைத்து செலவையும் மத்திய அரசே ஏற்றுகொள்ளும் என அறிவித்துள்ளது பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அலைகளின் சீற்றத்தால் சில சமயங்களில் ஐய்யன் வள்ளுவர் சிலையை காண முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் இவற்றை கண்டுகளிப்பதோடு அரசுக்கும் இதனால் வருமானம் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த நல்ல திட்டத்திற்கு தமிழக அரசு முட்டுகட்டை போடாமல் உடனே அனுமதி வழங்க வேண்டும். அனுமதி கிடைத்தவுடனே குமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஸ்ணன் அவர்கள் காலம் தாழ்த்தாது பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு கொள்வதோடு இந்த உன்னதமான திட்டத்தை அறிவித்ததற்காக பொதுமக்களின் சார்பாக நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Saturday, January 10, 2015

ஈழத்தமிழர் படுகொலை உக்கிரமாக தொடருமோ?

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன், மைத்திரி பால சிறிசேனா தேர்தல் களத்தில் நின்றார். தமிழர்களும் பெரிய தீமையான ராஜபக்சா க்கு வாக்குகளை செலுத்தாமல், சிறிய தீமையான மைத்திரி பால சிறிசேனா க்கு வாக்களித்து அதிபராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். இப்போதைய அதிபரே தமிழீழ இனப்படுகொலை 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த போது இராணுவ அமைச்சராக இருந்து ராஜபக்ஷ வின் கட்டளையால் இராணுவத்துக்கு அதிகாரத்தை கொடுத்து இன அழிப்பை செய்தார். அப்போது இராணுவ தளபதியாக பொன்சேகா இருந்தார். இப்போது அந்த தளபதியையே இராணுவ செயலாளராக நியமித்துள்ளார் இப்போதைய அதிபரும், இராணுவ அமைச்சக மந்திரியுமான மைத்திரி.

எனவே இப்போதே அவர்கள் திட்டமிட்டு தமிழருக்கெதிராக மீண்டும் இனப்படுகொலைகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளார்களோ என்ற அச்சம் தமிழர்களிடயே எழுந்துள்ளது. எனவே மீண்டும் மைத்திரியும், பொன்சேகாவும் இணைந்துள்ள நிலையில் அந்த காட்டுமிராண்டி செயலை செய்ய துணியாமல் தமிழர்களுக்கு சுய உரிமையை வழங்க வேண்டும்.

தமிழர்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்ற மைத்திரி இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் தமிழர்களின் காணிகளை திரும்ப ஒப்படைத்து, இராணுவத்தை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றி தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழி வகை செய்து தமிழர்களுக்கு கைமாறு செய்யவேண்டும்.

மறுமலர்ச்சி மைக்கேல்...