தமிழ் நாள் காட்டியில் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழர்கள் அனைவருமே புதுப்பானைகளை வாங்குவர். வசதிபடைத்த பலர் புத்தாடைகளையும் வாங்கி உடுத்தி மகிழ்வர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு முற்றத்தை முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.
எனவே தமிழர்களாகிய நாம் அனைவருமே பொங்கல் தினத்தில் புன்னகையோடு இனைப்பை அனைவருக்கும் பரிமாறி அன்பை அனைவரிடத்திலும் ஓங்க செய்ய வேண்டும். தமிழரின் திருநாளிலே அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தி மக்களை சுறுசுறுப்பாக்குவதோடு அனைத்து மக்களுமே ஒருவருக்கொருவர் கலந்துரையாட வாய்ப்பாகவும் அமையும். இந்த தினத்திலே அனைவருமே அன்பை வளர்க்கவும் உறுதி ஏற்போம். சூரிய திசையை நோக்கி பொங்கலிடும் நாம் அனைவருமே ஆனந்தத்தில் பொங்குவோம். அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment