Tuesday, August 3, 2021

வாழ்த்திய அன்புகளுக்கு நன்றி!

நேற்று மாலை முதலே வாழ்த்து சாரலில் நனைந்து கொண்டே இருக்கிறேன். 

எளியவன் மேலும் பாசம் வைத்து வாட்சப், முகநூல், மெசஞ்சர், அலைபேசியில் என‌ பல உறவுகள் இந்த பிறந்த நாளில் வாழ்த்திவிட்டீர்கள்.

அன்பு தலைவர் வைகோ அவர்களின் கண்மணிகளாக, குடும்பத்தாராக, நண்பர்களாக, உறவினர்களாக, தோழமைகளாக என அன்பால் என்னை கரைத்துவிட்டீர்கள்.

என் மீதுள்ள உங்கள் அன்பை தக்கவைக்க என்னை நானே பட்டை தீட்டிக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்த்துக்களால் என் ஆயுள் கூடிக்கொண்டேயிருக்கிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

பாசம் காட்டி என்னை, அன்பால் பல்கி பெருக வைத்துவிட்டீர்கள்.

உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் பறந்து வந்து நாக்கில் விழுகின்றன. ஆனாலும் எல்லாம் எழுதி சலிப்படைய செய்யாமல், உங்கள் அன்புக்கு பாத்திரமாயிருப்பேன் என்று கூறி, என் மீது பாசம்‌ காட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை மனதார தெரிவிக்கிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.
03-08-2021

Monday, June 21, 2021

காவு வாங்குகிறதா, குமரி மாவட்டம் கருங்கல் பகுதி வேளாங்கோடு செம்மண் குளம்! தொடரும் வாகன பலிகளால் மக்கள் கடும் அச்சம். குளத்திற்கு உறுதியான தடுப்பு சுவர் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செல்லங்கோணம் செல்லும் சாலையில் வேளாங்கோடு என்னும் செம்மண் குளம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 21-06௨021 குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (50 வயது) ரப்பர் விவசாயி, தனது மூத்த மகள் ஷாமினி (வயது 21), இலைய மகள் ஷாலினி (வயது 20) ஆகியோருடன், ஈத்தாமொழி பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு செல்லும் வழியில், கருங்கல் நண்பரை சந்தித்து விட்டு, பேருந்துகள் ஓடும்  செல்லங்கோணம் செல்லும் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் வாகனம் செம்மண் குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இளைய மகள் ஷாலினி வாகன கதவை திறந்து நீந்தி உயிர் தப்பினார். போதிய வெளிச்சமும் இல்லாததால், தந்தையையும், சகோதரியையும் காப்பாற்ற இயலாத சூழலில், தந்தையும், சகோதரியும் காருடனே நீரில் மூழ்கி ஷாலினி கண் முன்னே பரிதாபமாக இறந்தனர். இது அந்த வட்டார மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

இந்த கோர விபத்தானது, குளத்தை ஒட்டி சாலை அமைந்ததாலும், சாலை சரியில்லாததாலும், குளத்திற்கும் சாலைக்கும் இடையில் தடுப்பு சுவர் இல்லாததாலும், சாலை வெளிச்சம் இல்லாததாலும் நடந்திருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இதே குளத்தில், இதே போல கடந்த நாட்களிலும், 15 க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்களால் பலர் இறந்துள்ளனர். இதனால் உறுதியான தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் சார்பாக பலமுறை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தும் முந்தைய தமிழ்நாடு அரசு செவிசாய்க்காமலே இருந்திருக்கிறது என்பது குமரி மாவட்ட மக்களின் துர்பாக்கிய நிலையாக இருக்கிறது.

இந்த செம்மண் குளத்தை போல, செல்லங்கோணம் கடையகுளம், கப்பியறை குளம், மேக்கோடு குளம், பெத்தேல்புரம் குளம், வேம்பனூர் குளம்ம் புத்தேரி குளம், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சுங்கான்கடை குளம், போன்ற 100 க்கும் மேற்பட்ட குளங்கள் குமரி மாவட்டத்தில் மக்கள் பயணம் செய்யம் பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளன. இவை யாவற்றிற்கும், தடுப்பு சுவரோ, தரமான சாலையோ, இரவு நேரங்களில் போதிய வெளிச்சமோ இல்லை. சாலையை விட குளம் தாழ்வாக இருப்பதாலே விபத்துக்கள் தொடர்கிறது என்பது அவலத்திற்குரிய செய்தியாகும்.

சாயங்கால நேரம் முதல், அதிகாலை நேரம் வரை சாலை விளக்குகள் இல்லாமலும், விளக்குகள் இருந்தும் பராமரிப்பு இல்லாததால் வெளிச்சம் இல்லாததாலும், குளங்களை ஒட்டிய சாலைகளுக்கு தடுப்பு சுவர் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் தினமும் அவதிக்குள்ளாகின்றனர் என்ற செய்தி தினசரி நாளேடுகளில் குமரி மாவச்ச செய்தி பக்களில் தினமும் வருவதை காணலாம்.

இப்படிபட்ட விபத்துக்கள் அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகளின் குடும்பங்கள், தங்களின் வருமானம் ஈட்டும் தந்தையையோ, மகனையோ அல்லது குடும்பமாக செல்லும்போது, மொத்த குடும்ப உறுப்பினர்களையோ இழக்கும் நிலையால், பல குடும்பங்கள் அனாதைகளாக வாழும் அவலம் குமரி மாவட்டத்தில் தொடர்கதையாகி வருகிறது.

இது போன்ற அவல நிலயை தடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் இதுவரை உயரமான தடுப்பு சுவர் அமைத்து தராமாலே முந்தைய அரசுகள் தட்டி கழித்தன. 
ஆகவே தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு அரசு, குமரி மாவட்டத்தின் பேருந்துகள் ஒடும் பிரதான சாலையை ஒட்டியுள்ள அனைத்து குளங்களிலும் சாலையை விட, 6 அடிக்கு மேலான உயரமான, உறுதியான  தடுப்பு சுவர் அமைத்து இது போன்ற வாகன விபத்துகளை தடுத்து குமரி மாவட்ட குடும்பங்கள் அனாதைகளாகும் அவல நிலையிலிருந்து காக்குமாறு குமரி மாவட்ட பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். 

மைக்கேல் செல்வ குமார்
குமரி மாவட்டம்
21-06-2021

Wednesday, June 16, 2021

"பேங்க் ஆப் தமிழ்நாடு" மறு உருவாக்கம் செய்ய கோரிக்கை!

‘பேங்க் ஆப் தமிழ்நாடு’ என்ற பெயரில் இயங்கி வந்த வங்கியை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைத்து அரசுடமையாக்கினார்கள் தமிழர்கள்.

அதை தற்போது தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு முனைவது தமிழர்களின் மீதான சுரண்டலாக கருதபடுகிறது.
ஆகவே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியாருக்கு விற்பதை, தமிழ்நாடு அரசு தடுப்பதோடு, ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' என்ற பழைய பெயரில் தமிழ்நாடு அரசாங்கமே புதிய வங்கியை மறுபடியும் உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அதில் தமிழர்கள் தங்கள் வங்கி கணக்குகளை திறந்து, மாநில பொருளாதாரத்தை சீரமைக்க வாய்ப்பு ஏற்படும்.
இப்போதுள்ள சூழலில் அனைவரும் தேசிய வங்கிகளிலே கணக்கு வைத்திருப்பதை தமிழ்நாடு அரசு ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' என்ற வங்கியை திறந்தவுடன் அதிலே கணக்கு தொடங்குவார்கள். மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
ஆகவே முதல்வர் M. K. Stalin அவர்களே, தமிழ்நாடு நிதி அமைச்சகத்தின் கீழ், நிதி அமைச்சரை தலைவராக கொண்டு புதிதாக நமது‌ பழைய வங்கியான ‘பேங்க் ஆப் தமிழ்நாடு' மறு உருவாக்கம் செய்து தர வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறேன்.
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் மதிமுக.
16-06-2021

Thursday, June 3, 2021

நீங்களும் எழுதுங்கள் USI என்று!

அண்ணன் மானாமதுரை மருது அவர்கள்தான் முதலில் முகநூலில் USI என எழுதியதாக ஞாபகம். தமிழின வழிகாட்டி, தமிழ்நாட்டு ஊழியன் அன்பு தலைவர் அவர்கள் வைகோ அவர்கள் சொன்னதைதானே அண்ணன் எழுதியிருக்கிறார் என்று நினைத்து நானும் எனது முகநூலிலும் ட்விட்டரிலும் முழுதாக United States of India என்று சில ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியிருந்தேன். இன்றளவும் அப்படியே இருக்கிறது.

அதன் வீரியம் இப்போது அதிகமாகிக்கொண்டேயிருப்பது மகிழ்ச்சி...
இந்திய ஒன்றியம் என்பதில் மகிழ்ச்சியடைந்தாலும், முழுதாக இந்திய ஐக்கிய நாடுகள் என்று பெயரை மாற்றுவதே நமது லட்சிய தாகமாக கொள்ளவேண்டும். அதற்காக பயணப்படுவோம்.
மைக்கேல் செல்வ குமார்
இந்திய ஐக்கிய நாடுகள்.

Thursday, May 13, 2021

ரமலான் நல் வாழ்த்துக்கள்!

தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் அந்தி சாய்கிறது வரை விரதம் இருந்து மெக்கா நோக்கி தொழுகை செய்கின்றனர்.

பிறை கண்டு நோன்பு‌ தொடங்கி, அடுத்த பிறை காணும்போது நோன்பு முடித்துக்கொள்கின்றனர்‌.

அவர்களின்‌ கடமைகளின் ஒன்றான கொடை என்ற வள்ளல் மனதால் ஏழை எழியோருக்கு உணவு உடை‌ உறைவிடம் போன்றவையும் செய்து வருகின்றனர்‌.

அவர்கள் கொடையே அவர்களை செழிப்பாக வைக்கிறது என நம்புகின்றனர். 

ரமலான் காலம் கடந்த வருடமும் இந்த வருடமும் கொரொனா கொடுமை உலகை வாட்டி வதைக்கிறது. நோயோளிகளுக்கு உதவுவதிலிருந்து, மரணித்தவர்களை மண்ணில் அடக்கம் செய்ய முன்வராதவர்களை இஸ்லாமிய மக்களே தங்கள் ஈகை குணத்தால் அடக்கம் செய்து இறுதி மரியாதையையும் செய்தனர்.

கருணையுள்ளம் கொண்ட மக்களாக விளங்கும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும், ரமலானை கொண்டாடும் அனைவரும் நல் வாழ்வு வாழ ரமலான் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வ குமார்

Friday, April 23, 2021

உலக புத்தக தினங்களில் தமிழீழ வரலாற்று நூல்களை பரப்புவோம்!

உலக புத்தக தினமானது முதன் முதலாக 1995 ஏப்ரல் 23 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டு இப்போது இதை வருடாந்திர நிகழ்வாக கொண்டாடி வருகிறது.

இந்த தினமானது, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் அல்லது புத்தகத்தின் சர்வதேச நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் தமிழீழம் சார்ந்த நூல்களை தமிழர்கள் அனைவரும் பரப்புவது, தமிழர்களை அறிய செய்வதும் நமது கடமையாகும். இனி வரும் காலங்களில் இந்த தினங்களில் தமிழீழம் சார்ந்த புத்தகங்கள் அதிகம் வெளியிடவும், தமிழீழம் சார்ந்த புத்தக கண்காட்சி நடத்திடவும் தமிழ் சமூகம் முனைப்பு காட்ட வேண்டும். தமிழீழ வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெளிவாக புரிந்துகொள்ள இப்படி பட்ட தினங்களை புதிய நூல்கள் வெளியிட்டும், பழைய நூல்கள் தமிழர்கள் வாங்கி பயன்பெறும் வகையில் அமையவும் நாம் செயலாற்ற வேண்டியது கடமையாகிறது. 2009 மே 18 ல் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட எம் தமிழ் இனத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்படிருந்தது. இந்த நினைவுதூபி 2021 ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு, சிங்கள ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தால், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இந்த ஒடுக்குமுறையை கண்டித்து, பல்கலை மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தியதோடு, பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டங்களால், மீண்டும் தமிழின படுகொலைக்கான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலை நிர்வாகம் முன்வந்தது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ் இனத்தின் அடையாளமான நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் 23-04-2021 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் அடங்கிய வரலாறுகள் வரும் புத்தக தினங்களில் உலகம் அறிய செய்திட வேண்டுமென விரும்புகிறேன். சில புத்தகங்களை வாசித்து சில பக்கங்கள் முடித்து முடி வைத்துவிடுவோம். ஆனால் தமிழீழ வரலாறுகளை படிக்கும்போது நாம் மூட இயலாதவாறு தமிழர்களின் ரத்தமும் தமிழ் உணர்வும் போராட்ட குணமும் அறமும் படிப்பவர்களை நூலை மூட விடுவதில்லை. ஆகவே தமிழர்களே புத்தக தினங்களில் தமிழர்களான நாம் தமிழீழம் சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்து, பரிந்துரை செய்து தமிழீழ வரலாற்றை உலகின் முட்டுச்சந்துகளுக்கு எடுத்து செல்வோம். தமிழீழம் மலரும் நாளே தமிழர்களின் விடிவு நாள். பொதுவாக்கெடுப்பே தமிழீழத்தின் ஒரே தீர்வு. "தமிழர்களின் தாகம், தமிழீழ தாயகம்" தமிழீழ தாயகத்தில் கால் பதிக்க காத்திருக்கும் தமிழன்,
மைக்கேல் செல்வ குமார்