Wednesday, March 25, 2015

வலைதள கருத்துக்காக கைது செய்யும் மத்திய அரசின் 66-ஏ சட்ட பிரிவு செல்லாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு! அதை மீறி கைது செய்தால் நட்ட ஈடு வழங்கவும் உத்தரவு!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் இத்தகைய கைது நடவடிக்கைக்கு பயன்படுத்துகிற தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசு 2008 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் சேர்க்கப்பட்ட 66 ஏ பிரிவின் படி, சமூக வலைதளம், மின் அஞ்சல் போன்றவற்றின் மூலமாக அவதூறான கருத்துகளை பரப்புவோரை கைது செய்து 3 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க முடியும். இந்த 66 ஏ பிரிவின் படி நாடு முழுவதும் வலைதளங்களில் சர்ச்சை கருத்தை தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது. இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 66- ஏ சட்டப் பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த சட்டப்பிரிவு தெளிவானதாக இல்லை. அரசாங்கம் என்பது வரலாம், போகலாம். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசியல் சாசனத்தில், அனைவருக்கும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது. இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது என்று கூறினர்.


மறுமலர்ச்சி மைக்கேல்.

Friday, March 20, 2015

குமரி கீதம் - இது நம்ம குமரி!

குமரி கீதம் - இது நம்ம குமரி
லே மக்கா..! அடி பொழியா இருக்கு ல... 
பின்னம் பின்னம் பாக்கணும் போல இருக்கு டே..

நண்பர்களே..! அதிகம் பகிருங்கள். . 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Tuesday, March 10, 2015

வெற்றி வாகை சூடிய, கொடுப்பைக்குழி மக்களின் போராட்டம்!

கடந்த ஒரு வருட காலமாக குமரி மாவட்டத்தின், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தின், தினசரி குளிக்க மக்கள் பயன்படுத்தும் ஒட்டாங்குளத்திற்கு அருகில் அரசு அனுமதியின்றி பன்றி பன்ணை இயங்கி வந்த்தது. கொடுப்பைக்குழி சுற்றுவட்டார பொதுமக்கள், பல குழுக்களாக, பலமுறை பஞ்சாயத்து தலைவர், மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை அதிகார், மத்திய மந்திரி, மாநில சட்டசபை உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து கவுண்சிலர், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என அனைவரிடத்தும் மனுக்களை கொடுத்தும் பலனில்லாமலிருந்தது. 

பின்னர் கொடுப்பைக்குழி பொதுமக்கள் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் என சுமார் 300 க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராக பாரிய உண்ணாவிரத அறப்போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த அறப்போராட்டத்திற்கு இன்று விடை கிடைத்துள்ளது. 

இன்று காலை நேரத்தில் பன்றி பண்னைக்கு வந்த அரசு அதிகாரிகள் அனைத்து பன்றிகளையும் சிறை பிடித்ததோடு, அனுமதி இல்லாமல் இயங்கின பண்ணையையும் இழுத்து மூடினர். இதனால் கொடுப்பைக்குழி  சுற்றுவட்டார பொதுமக்கள் பேராபத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இதற்கு காரணமாயிருந்த இளைஞர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Tuesday, March 3, 2015

பன்னிரெண்டாம், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வாழ்த்து!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5 அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும் தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். 

மாணவ செல்வங்கள், தேர்வுக்காக வீட்டிலிருந்து புறப்படுவதற்கு, முன்னதாகவே தேர்வுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் இரத உபகரணங்களை தவறாது சரி செய்து எடுத்து செல்லும்படிய் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

மேலும் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

அரசு பேருந்துகள், தேர்வுக்குப் புறப்பட்டுச் செல்லும் மாணவர்களை எல்லா நிறுத்தங்களிலும் நின்று ஏற்றி இறக்கிச் செல்லும் வகையில் அரசு வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும்.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிக்கூடப் பகுதிகளில், சத்தமாக ஒலிப்பெருக்கியை இயக்கிடுவதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்த்திட முன்வர வேண்டும்.

வருங்கால தமிழகத்தின் தூண்களான என் இனிய மாணவச் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Saturday, February 28, 2015

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிறிஸ்தவ ஊழிய கட்டடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவர், அனுமதியில்லாமல் இயங்கும் தீங்கு விளைவிக்கும் பன்றி பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட, நாயக்கன்விளை கிராமத்தின், குட்டிமாந்தட்டு மடை பகுதியில், சடையால் புதூர் செல்லும் சாலையில், ஒரு கிறிஸ்தவர் தனது சொந்தமான நிலத்தில், சிறிய வீடு கட்டி குடிபுகுந்துள்ளார். தனது வீட்டின் மறு பகுதியில் வெளிபுறத்தில் சிறிய தொழுகை இடத்தையும் உருவாக்கி வயோதிபர்களுக்காக, குடும்ப வறுமையில் கக்ஷ்டபடுபவர்களுக்காக, மற்றும் பல்வேறு பிரச்சனைகளை கொண்டவர்களுக்கு ஜெபித்து வருகிறார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும் அதை விரும்பும் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஊழியத்தை செய்து வரும் இவர் மக்கள் அதிகமாக வருவதால் சிறிய அளவிலான பெந்தேகோஸ்தே சபை போல விரிவு படுத்துகின்ற நிலையில், குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள் தமிழக காவல்துறை உதவியுடன் அந்த தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்று, இப்படிபட்ட ஊழியங்களின் கட்டடங்களுக்கு தாங்கள் அனுமதி வாங்கவில்லையென்று கூறி அதை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் சார்ந்திருக்கும் பாஜக வின் கொள்கைகளை பறைசாற்றுகின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். 

இப்படிபட்ட கிறிஸ்தவ ஊழியங்களை நடத்த கட்டடங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அதை தடுக்கும் பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்கள், எந்த வித அரசு அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக, பலமுறை பொதுமக்களின் போராட்டத்திற்கு பிறகும் கடந்த ஒரு வருட காலமாக கொடுப்பைக்குழி ஊரின் ஒரு பகுதியில் இயங்கிவரும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பன்றி பண்ணைக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு என்ன? பலமுறை பொதுமக்கள் மனுகொடுத்தும் பொதுமக்களின் மனுக்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்வது ஏன்? பன்றி பண்ணையை பற்றி பஞ்சாயத்து தலைவர் வாய் திறக்காமல் மெளனமாக உலாவருவது ஏன்? பன்றி பண்ணை முதலாளிகளிடம் விசுவாசமாக இருக்கிறாரா? அவரோடு சேர்ந்து அவரின் கூட்டாளிகளையும் பன்றி பண்ணைக்கு எதிராக போராட விடாமல் தடுக்கிறாரா?

ஊர் நன்மைக்காக போராட்டத்தில் முனைப்போடு பணியாற்றுகின்ற இளைஞர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்த பன்றி பண்ணை முதலாளிகளை கண்டித்து வழக்கை திரும்ப பெற செய்யாதது ஏன்? சொந்த ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சொந்த ஊரிலே நிகழும் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சொந்த ஊர் மக்களையே காப்பாற்ற முடியாத பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி குருந்தன்கோடு பஞ்சாயத்து முழுவதுமுள்ள பகுதி மக்களை எப்படி காப்பற்றுவார்? சிறிய பிரச்சினைகளுக்கே தீர்வு காண முடியாத தலைவரின் தகுதிதான் என்ன?

இவ்வளவு கண்டனங்களுக்கு பிறகும் அதிகாரிகளையும் தன் வசமாக்கி பன்றி பண்ணையை அகற்றாமலிருக்கும் திரு.வைகுண்டமணி அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தி தமிழக அரசு அவரது தலைவர் பதவியை பறிக்க வேண்டுமென்று முக நூல் வாயிலாக் வேண்டுகோள் வைக்கிறேன்.

அடுத்த தேர்தலில் இவர் போன்ற தலைவர்களுக்கு மக்கள் பணம் பாராமல் பொதுமக்கள் நலம் சார்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதாவது இவரை போன்றவர்களுக்கு புத்தி தெளிகிறதா என பார்ப்போம்.

போராடுவோம் வெற்றி பெறுவோம்.....

மறுமலர்ச்சி மைக்கேல்.

Wednesday, February 25, 2015

ஜெசிகா-வின் தமிழின உணர்வு!

தமிழீழ சிறுமி ஜெசிகா மற்றும் ஜெசிகா-வின் தகப்பனாரின் தமிழின உணர்வு வெளிப்பட்டிருக்கின்றது, இந்த இன உணர்வு தமிழனை தவிர, தமிழ் இனத்தை தவிர வேறு எந்த இனத்துக்கும் கிடையாது. தமிழன் என்று சொல்லுவோம், தலை நிமிர்ந்து சொல்லுவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்

அன்னை தெரசாவை கொச்சைபடுத்திய மோகன் பகவத்-க்கு கடுங்கண்டனம்!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தான் அன்னை தெரசா சேவை  செய்தார் என்று கூறியிருக்கிறார். அன்னை தெரசாவை இதைவிட மோசமாக அவமதிக்க முடியாது; அவரது சேவையை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. பகவத்தின் இந்த பேச்சு கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துகொள்கிறேன்.

அன்னை தெரசா என்றாலே அவரது தன்னலம் கருதாத சேவை தான் நினைவுக்கு வரும். அவர் மதம், இனம், மொழி ஆகிய அனைத்தையும் கடந்தவர். அதனால் தான் மதம், மொழி, இனம் ஆகிய மூன்றின் அடிப்படையிலும் எந்த தொடர்பும் இல்லாத இந்தியாவுக்கு வந்து சேவை செய்தார். தாய், தந்தையை கடுமையான நோய் தாக்கிவிட்டால் அவர்களை கவனித்துக் கொள்ள பிள்ளைகளே முன்வராத இந்த காலத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தமது அன்புக் கரங்களால் அள்ளி எடுத்து கவனித்துக் கொண்டார். இப்படிப்பட்ட சேவை செய்தவரை மோகன் பகவத் அறியாதிருப்பது துரதிஸ்டவசமானது. அவரின் சேவைக்கு மோகன் பகவத் இப்படியாக அவதூறு கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற பொது கூட்டங்களில் மக்களின் மனதை வென்றவர்களை இனிமேலாவது மோகன் பகவத் போன்றவர்கள் நிறுத்து கொண்டு மக்கள் தொண்டாற்றவேண்டுமென கேட்டு கொள்கிறேன். இப்படி பேசுபவர்களை மத்திய பாஜக அரசு கண்டிக்காமலிருப்பது இந்து மத கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பது போல இருக்கிறது. எனவே மத்திய அரசானது இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்க வேண்டுமென்றும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.