Thursday, August 13, 2015

கன்னியாகுமரி மாவட்டத்தில் கம்பியில்லா இணைய வசதி-பொன். ராதாகிருஸ்ணன் அவர்களுக்கு மறுமலர்ச்சி மைக்கேல் பாராட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிஎஸ்என்எல் சார்பில் கம்பியில்லா இணைய (wifi) வசதி செய்யப்படவுள்ளது. மேலும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா, காந்தி மண்டபம், நாகர்கோவில் பேருந்து நிலையம் மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்ளில் விரைவில் கம்பியில்லா இணைய வசதி (wifi) வசதி செய்யப்படும் எனவும் தற்போதைய தொழில்நுட்பத்துடன் கூடிய தொலை தொடர்பு இயந்திரங்களை மாவட்டத்தில் உடனடியாக பொருத்தி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளது.

மேலும் குளச்சல், கன்னியாகுமரி, குலசேகரம், குழித்துறை, நாகர்கோவில், தக்கலை ஆகிய பி.எஸ்.என்.எல் எக்சேஞ்களில் பழைய உபகரணங்களை மாற்றி புதிய தலைமுறைகளுக்கான (3g, 4g) உபகரணங்களை பொருத்தும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும்.

இத்தகைய நற்பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கும் மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, இத்தகைய மக்கள் பயன்பெறும் பணிகளை வேகமாக செய்ய BSNL நிறுவனத்திற்கு அழுத்தம் தந்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டுவருவதால் குமரி மக்கள் விலையில்லா இணையதள வசதியை பெற்று தொடர்புகளுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Saturday, August 1, 2015

காந்தியவாதி சசிபெருமாள் உயிரிளப்புக்கு கண்ணீர் அஞ்சலி – இறப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கடும் கண்டனம்!

குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் உள்ள மதுக்கடை தேவாலயங்கள், கோவிலகள் மற்றும் பள்ளிகூடங்களுக்கு அருகில் அமைந்திருக்கிறது. இதை அகற்ற கோரி பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனர் ஊர் பொதுமக்கள். ஆனால் அகற்றபடாமலே இருந்தன. இதனால் ஒரு மாதத்திற்கு முன்னரும் மதுக்கடைகயை அகற்ற காந்தியவாதி சசிபெருமாள் முன்னிலையில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ஒரு மாதத்திற்கும் மதுக்கடையை மாற்றிவிடுவோம் என காவல்துறையினர் வாக்கு கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மதுக்கடை அகற்றபடாமல் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவே இருந்து வந்தது.

ஒரு மாதகால அவகாசம் கொடுத்தும் மதுக்கடையை அகற்றாத அரசை கண்டித்து, காந்தியவாதி சசிபெருமாள் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சசிபெருமாள் மிரட்டல் விடும் விதமாக அலைபேசி கோபுரத்தில் ஏறினார். மதுக்கடையை மூட வலியுறுத்தி போராடினார். இந்த மதுவிலக்கு போராட்டத்தில் நாலு மணி நேரமாக அலைபேசி கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் தமிழக காவல்துறை காந்தியவாதி சசிபெருமாளை கீழே இறங்க நடவடிக்கை எடுக்காமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. நடு வெயிலில் நான்கு மணி நேரத்திற்கு மேல் 200 அடி உயரத்திற்கும் மேலுள்ள அலைபேசி கோபுரத்தில் போராடியதால் சிறு களைப்பாக இருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் கடைசியில் அவரை கீழே இறக்க முயன்று, அவரது உடலில் கயிறு கட்டி, வயிறு பகுதி நெஞ்சு பகுதிகளில் சுற்றி கீழே இறக்கியுள்ளனர். கீழிறக்கும்போது மயக்க நிலையிலே இருந்துள்ளார் சசிபெருமாள். அதனால் பொதுமக்களை அவரின் பக்கத்திலே காவல்துறை அனுமதிக்கவில்லை. உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். பின்னர் சற்று நேரம் கழித்து சசிபெருமாள் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இது தமிழக மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சசிபெருமாள் சோர்வாக இருந்ததாலும், மேலும் அவரை கயிறு மூலம் கட்டி இறக்கியதால், கயிறு இறுகியதினாலும் அவர் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர்மேலும் அவரின் உடலில் ரத்தம் இருந்ததாலும், அந்த ரத்தம் அவரின் மேலாடை முழுதும் பரவியதாலும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சசிபெருமாள் அவர்கள் அலைபேசி கோபுரத்தில் ஏறியவுடனே, கடமைக்கு பேச்சுவார்த்தை என்ற பெயரில் சசிபெருமாளை கீழிறக்காமல் நின்றுள்ளனர் காவல்துறையினர். முதலிலே போலீசார் அவரை கீழ் இறக்கியிருந்தால் அவர் நிச்சயமாக காப்பாற்றப்பட்டிருப்பார். காவல்துறை அராஜக போக்கை கடைபிடித்து அவரின் உயிரை காப்பாற்ற தவறியிருக்கிறது. மேலும் அவரின் உடலில் எவ்வாறு இவ்வளவு ரத்தம் வந்தது என்பதை காவல்துறையும் தமிழக அரசும் மக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டும்.

இறந்த சசிபெருமாள் அவர்களின் உடல் ஆசாரிப்பள்ளம் கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலே வைக்கப்பட்டிருக்கிறது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் நேற்று மாலை பார்வையிட்டு போஸ்ட்மார்ட்டம் நடைபெற இருந்ததை தடுத்து நிறுத்தி, சசிபெருமாள் மகன் வந்த பின்னர் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

சசிபெருமாள் மகன் மற்றும் குடும்பத்தினர் சசிபெருமாள் உடலை வாங்க மறுத்தனர். தமிழக அரசு மதுகடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கும் வரை சசிபெருமாள் அவர்களின் உடலை பெற்றுகொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்துவிட்டனர். இதற்கு குமரி மாவட்ட மக்கள் அனைவருமே முழு ஆதரவு தந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே தமிழக அரசானது மதுவிலக்கிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிற காந்தியவாதி சசிபெருமாளின் உயிரை காக்க தவறிய தமிழக அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சசிபெருமாள் அவர்களின் இறப்பின் மர்மத்தை விளக்க, பணியில் இருக்கும் நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்தி, குற்றங்களை கண்டுபிடிக்கவேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மதுவிலக்கிறகாக போராடிய சசிபெருமாள் அவர்கள் மதுவிலக்கு போராட்டக்களத்திலே உயிரைவிட்டார். அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். மேலும் அன்னாரது ஆன்மா இறவனுடைய திருவருளில் சேரவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, July 27, 2015

அன்னை தமிழகத்தை அலை திரளாக அகிலமெங்கிலும் பரப்பிய அணுவை துளையிட்ட அப்துல் கலாமிற்கு கண்ணீரில் எழுதிய இரங்கற்பா!

இந்தியரை உலக உச்சாணியில் ஏற்றி வைத்து, இப்போது ஏங்க வைத்த ஏவுகணை நாயகனே உலக மக்களின் கன்ணீரிற்கு நாயகனாகிவிட்டீரே!

பட்டித்தொட்டியில் பிறந்து பாமரனாய் வீட்டில் வளர்ந்து பாகுபாடின்றி பகுத்துணர்ந்து பல கண்டங்களை கண்டதனால்தான் காவியமானீரோ?

கனவு காணுங்கள் என்று சொல்லி கொடுத்த மேதை இப்போது மேகங்களில் மறைந்து விட்டார். அவர் சொன்ன அந்த கனவிலாவது அவரை காணுவோமோ?

2020 என்று சொல்லி வல்லரசாவதற்கு முன்னரே இந்த வல்லாதிக்க ஆட்சியை கண்டு மனம் பொறுக்காமால் நீவிர் மெளனித்தது ஏனோ?

உமது திட்டங்களை இந்தியம் நிறைவேற்றுமா என்று ஏக்கத்துடனே எங்களை ஏங்க வைத்துவிட்டு ஏகலவனிடம் ஏணி படியேறி சென்றது ஏனோ?

சிறு பிள்ளை முதல் படுக்கை பாட்டி வரை உமது பெயரை உச்சரிக்க வைத்துவிட்டு, எங்கள் நாவிற்கு ஓய்வு கொடுக்க நீர் ஓய்வெடுத்தீரோ?

அன்பிற்கு இலக்கணமாய், அகிலத்தையும் ஆட்கொண்டு, எங்கள் இதயத்தை ஆக்கிரமித்து, அநாதையாய் எங்களை ஆர்ப்பரிக்க விட்டதேனோ?

அணுவை கொண்டு ஏழு கடலை தாண்டி ஏவுகணை செதுக்கிய நீவிர் சிலாங்கிலே சினம் கொண்டு ஏவுகணைகளை ஏங்க வைத்தது ஏனோ?

குழந்தைகளிடத்தில் இறைவனை கண்டு அவர்களை ஊக்கப்படுத்திய உன்னதமான நீவிர், அக்குழந்தைகளுக்காக இன்னொரு முறை வருவீரோ?

வல்லாதிக்க நாடுகளை கொலைநடுங்க வைத்து போக்ரான்-II மூலம் மூலை முடுக்கெல்லாம் செலுத்தமுடியும் எந்று நீவே ஏவுகணையானீரோ?

உலகமே உமை கண்டு வியக்கும்படி நீவிர் உருவாக்கிய உம்மை, உலக மக்களையெல்லாம் உறங்காமல் உளர வைத்ததேனோ?

அணுவை செதுக்கி சிறை பிடித்து, சிற்பமாக்கி, சீனாவை சினங்கொள்ள வைத்தவரே, எங்கள் சிந்தனைகளை சிதறவைத்ததேனோ?

மாணவர்கள் மல்லாந்து படுக்க, கனவுகளை கண்ணயராமல் காண, கற்று கொடுத்த கோமானே, எங்களை கையொடிந்த பறவைகளாக்கியதேனோ?

கற்று தந்த பாடங்கள் கலாம் பெயரை சொல்லும் போது காலம் காலமாய் கையெடுத்து கும்பிட என்னை கவிஞராய் உமக்கு கவிபாட வைத்தீரோ?

அகிலமே உம்மை போற்ற, எங்களை பொற்குவியலில் அடைத்து விட்டு, வெண்குகையில் நீவிர் தஞ்சமடைந்து தவிப்பதற்கு என்ன காரணமோ?

உலகமே உற்றுப்பார்த்த உன்னதர் உம்மை அணுவின் பெயரால் அகிலமே போற்ற ஆறடி ஆழத்தில் அமைதியாய் ஒய்வெடுக்க ஆயத்தமானீரோ?

கடல் பரந்த தேசமெங்கும் உமது கொள்கை பரவட்டும், இந்தியாவின் இறைமையை போற்றட்டும், தமிழராய் எங்களை தலை நிமிர செய்யட்டும்,

தமிழால், தமிழரால், தமிழுக்காக உமது புகழ் பெருகட்டும். உலகமே உமது நாமத்தை போற்றட்டும். புகழ்பெற்ற உம் ஆன்மா இறவன் புகழில் சேரட்டும்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, July 21, 2015

3 தமிழர்களுக்கு கருணை காட்ட கூடாது என வாதிட்ட மத்திய அரசுக்கு கண்டனம்!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற அரசியல்  சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, இந்த மனு எந்த அடிப்படையில் விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர்  ரஞ்சித் குமார், சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில், முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டக் கூடாது என்றும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சாந்தன், முருகன் தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 24 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே என்றும் வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

நிரபராதிகளை உச்சநீதிமன்றமே கடந்த ஆண்டு விடுதலை வழங்கிய பிறகும், மத்திய அரசு விடுவிக்காமல், கருணைகாட்ட கூடாது என கூறியிருப்பது மனித நேயமற்ற செயலாகும். இதனால் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதோடு, 3 தமிழர்களுடன், மொத்தமாக 7 தமிழர்களையும் மத்திய அரசு விடுவிக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Friday, July 17, 2015

உறவுகள் அனைவருக்கும் புனித ரமதான் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அகிலமெங்கும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள், ரமதான் காலங்களில் காலை முதல் மாலை வரை உண்ணாமல் அருந்தாமல் பசி தாகங்களை பொறுத்துக்கொண்டு விரதம் மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

இஸ்லாமியப் பெருமக்கள், விருந்தோம்பும் உயர்ந்த பண்புடன் மனிதநேயத்தோடு அனைவரிடத்திலும் அன்பு காட்டி வாழ்ந்து வருகின்றனர். அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். எனவே சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்

இஸ்லாமியப் பெருமக்கள் இனிய ரமலான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, குடும்பத்தில் சந்தோசம் ஒளிர  ரமதான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல, பள்ளிப் பாடத்தில் தவறான கேள்வி - பதில்! உடனே நீக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

தொன்மைத் தமிழ் மொழியின் மாண்பினைக் காக்கவும், தமிழர்களின் நெடிய நாகரிகம், பண்பாட்டில் அந்நியக் கலாச்சாரப் படையெடுப்பை தடுக்கவும், 1937 ஆம் ஆண்டு முதல் இந்தித் திணிப்பை எதிர்த்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட தமிழர் தலைவர்கள் கடுமையாகப் போராடினர். 1965 இல் மூண்டெழுந்த மொழிப்போரில் இலட்சக்கணக்கான மாணவர்கள் போலீசுக்கும் இராணுவத்துக்கும்அஞ்சாது வீதிகளில் இறங்கிப் போராடினர். எட்டுத் தமிழர்கள் தீக்குளித்து மடிந்தனர். கணக்கற்றோர் அடக்கு முறைக்குப் பலியானார்கள். 1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்திக்குத் தமிழகத்தில் இடம் இல்லை; தமிழும் ஆங்கிலமும் மட்டுமே’ என சட்டமன்றத்தில் பிரகடனம் செய்தார்.

இந்நிலையில், 2015௧6 ஆம் கல்வி ஆண்டில் வெளிவந்துள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில்பக்கம் 329 (ஆங்கில வழிக் கல்வி பக்கம் 306) இல் இந்தியாவின் தேசியமொழி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதில் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பதில்களுள் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளனர். ‘இந்தி’ என்ற பதிலைத் தேர்வு செய்யுமாறு ஆசிரியர்கள் கூறி உள்ளனர். இது மிகத் தவறான வழிகாட்டுதல்ஆகும்.

இந்தக் கேள்வி தேசிய ஒருமைப்பாடு என்ற பாடப்பிரிவின் கீழ்வருகிறது. ஆனால் இப்பாடத்தில் எந்த இடத்திலும் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பாடத்தின் இறுதியில் மேற்கண்டவாறு கேள்வி கேட்டு மாணவர்களைக் குழப்பி உள்ளனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்தியாவின் தேசிய மொழிஎன்று எந்த மொழியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியும், ஆங்கிலமும் அரசு இந்திய அரசின் அலுவல் மொழிகள் மட்டுமே. இந்தியாவிலேயே இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டது தமிழ்நாடு மட்டும்தான். பிற மாநிலங்களால் இந்தித் திணிப்பைத் தடுக்க முடியாமல் போனது. இன்று அம்மாநிலங்கள் தங்கள் சொந்த மொழிகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன.

இந்தியாவில் இந்தி மட்டுமே பேசப்படுகிறது என்ற மாயை, உலகம் முழுவதும் இந்திய அரசால் பரப்பப்பட்டு வருகிறது. இந்திய அரசின் இந்தப் பொய்ப் பரப்புரையை தமிழ்நாடு மட்டுமே இன்றுவரைகடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தமிழக மாணவர்களை நம்ப வைக்கின்ற விதத்தில், மேற்கண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. தமிழக அரசு உடனடியாக இந்தக் கேள்வியை நீக்க வேண்டும்; தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த தகவல்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, July 15, 2015

காமராஜர் பிறந்த நாளில் அவரது சாதனைகளை பரப்புரை செய்வோம்!

ஒருமுறை காரில் பய‌ணம் செய்து கொண்டிருந்த காமராசர் சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.

காரை நிறுத்த சொல்லி, அந்த சிறுவனை அழைத்து "ஏன் தம்பி, பள்ளிக்கூடம் போகலையா? என்று கேட்டார்.

காமராசர் முதலமைச்சர் என்பதை அறியாத சிறுவன் " பள்ளிக்கூடம் போனா சோறு யார் போடுவாங்க? என்று கேட்டான்.

"சோறு போட்டா பள்ளிக்கூடம் போறியா? என்று கேட்டதற்கு " போறேன்" என்றான் சிறுவன்.

உடனே பள்ளிகளில் "மதிய உணவுத் திட்டம்" கொண்டுவந்தார் காமராசர். அப்படி கல்விக்கு முக்கியத்துவம் தந்தார் கல்வித் தந்தை காமராசர். அவரது பிறந்த நாளில் அவரது சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்போம்.

மறுமலர்ச்சி மைக்கேல்