ஒவொரு
வருடமும் நான் பணி செய்யும் நிறுவனத்தில் பணி செய்யும் கீழ் நிலை ஊழியர்கள் முதல்
மேல் நிலை ஊழியர்களுக்காக பார்ட்டி (Annual Staff Party) நடைபெறும். அது மாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 2 மணி வரை
நடக்கும்.
அனைவருக்கும் பரிசுகள், மேலும் காசு கூப்பன்கள்
போன்றவை கிடைக்கும். மேலும் பல திறன் சார்ந்த போட்டிகளும் நடக்கும் அதற்கு
அருமையான பரிசு பொருட்களும் கிடைக்கும். சந்தோசங்கள் நிறைந்தே காணப்படும்.
சிரிப்புக்கு அளவே இருக்காது. கை தட்டல்கள் காதுகளை துளையிட முயலும்.
பல விதமான நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றுவோம். ஆனால் இந்த
வருடம் ஒன்றிரண்டு திறன் போட்டிகள் ஒரு சில துறைகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது, சில துறைகளுக்கு
நடத்தப்படவில்லை நேரமின்மை என கூறப்பட்டது.
ஏனென்றால் இந்த தடவை காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரை
நடந்தது. அதில் ஒரு சில திறன் போட்டிகளுக்கு நேரங்கள் அதிகமாக
செலவளிக்கப்பட்டுவிட்டது. சில கலகலப்பான போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
ஒரு சில போட்டிகள் மட்டுமே நடைபெற்றாலும் பரிசுகளும்
எப்போதும் போல அல்லாமல் ஆறுதல் பரிசுகள் போலதான் இருந்தன.
உணவு வகைகள் ஒரு சில புது வகைகளே இருந்தன. அதையும் அந்த
துறை அல்லாத பணியாளர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்டாலும் சுவை இருந்தது. ஆனால்
அதிகமான வைகைகள் காட்சிப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் எங்கள் நிறுவனம் 4 நட்சத்திர
உணவு விடுதி. அங்கே உணவுகளை காட்சி படுத்துதல் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த
தடவை எதுவுமே இல்லாதது போன்ற உணர்வு. ஒரு சில புகைப்படங்கள் கடமைக்கு எடுத்தது
போன்ற உணர்வுதான் ஏற்ப்பட்டது.
மொத்தத்தில்
இந்த வருடம் ஒரு நிறைவு இல்லாதது போலிருந்தது. எல்லாம் காரணம் கச்சா எண்ணெய் விலை
குறைவுதான் என்றால் நம்பவா போகிறீர்கள். ஆம் எங்கள் நிறுவனமும் பாதிக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் விலை குறைவால் அரசு துறை அதிகாரிகள் எங்கள் ஹோட்டலில் தங்குவதில்லை.
ராஜா எங்கள் பகுதியில் உள்ள அரண்மனைக்கு வராததாலும், அதனால் அரசு துறை ஊழியர்கள்
தங்குவது குறைந்ததாலும், மேலும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின்
நிகழ்ச்சிகளை இந்த வருடம் குறைத்துக் கொண்டதால் அதன் இழப்பும் அதிகமாகவே இருந்தது.
சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் சில அச்சுறுத்துதல்களால்,அவர்களின் வருகையும் மிக குறைந்துவிட்டது.
அதனால் எங்கள் நிறுவன மொத்த வருமானம் மிக குறைந்து
பட்ஜெட்டை விட குறைவாகவே காணப்படுகிறது. அதன் தாக்கம் ஊழியர்களின் வருடத்திற்கு
ஒரு முறை நடக்கும் பார்ட்டியிலும் நெருக்கடியை ஏற்ப்படுத்தியது என்பதே நிதர்சனம்.
இது வரை கடன் வாங்காத நான் பணி செய்யும் ஓமன் நாடு இந்த
2016 ஆம் ஆண்டு கடன் வாங்கி பட்ஜெட் போட்டது என்பது ஆச்சரியமும்
அதிர்ச்சியுமாகும். மேலும் அனைத்து அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில
நாடுகள் சிறிதளவு தப்பித்திருக்கிறது. உதாரணம் துபாய்.
ஒரு நாட்டில் பொருளாதாரம் இல்லையென்றால் எந்த விடயங்கள்
எல்லாம் தடைபடுகிறது. அதனால் மகிழ்ச்சி எவ்வளவு தடைபடுகிறது என்பதற்கு நேற்று
நடந்த எங்கள் பார்ட்டியே சான்று.
எண்ணெய் விலை இப்படியே போனால் இன்னும் 3 ஆண்டுகள்
பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். ஏற்கனவே குறைக்கப்பட்ட ஊதியம் கூட
கிடைக்கப்பெறாமல் போகும் நிலை வரலாம். வெளிநாட்டினர், குறிப்பாக இந்தியர் நாடு
திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும்.
அந்த நிலை உருவானால் எங்களை போன்றோர் நிலை? அடுப்பை கோழி கிண்டும்
நிலைதானோ? மோடி
விழித்துக்கொள்வாரா?