Tuesday, January 27, 2015

சிறை குற்றவாளியை முன்னிறுத்தும் தமிழக அரசை அதிகார இறக்கம் செய்ய வேண்டும்.

நடந்து முடிந்த குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் தமிழக அரசு துறை சார்பாக தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது. இதில், காவல்துறை உள்பட 25 துறைகளின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இந்த வாகனங்களின் அனைத்திலும், சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளி ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருந்தது. இது மட்டுமல்ல, தற்போதைய முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் படம் ஒரு இடத்திலும் சிறிய வடிவில் கூட இடம்பெறவில்லை. இது அதிமுக அரசின் சர்வாதிகார அராஜக போக்கை காட்டுகிறது. இதை செயல்படுத்திய அதிமுக அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, தற்பொழுது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார். அவரின் படத்தை அரசின் பொது நிகழ்ச்சிகளில் உபயோகிப்பது அரசியல் சட்டத்திற்கே புறம்பான செயலாகும். இது அவமானகரமானது மட்டுமல்ல, இந்தியாவுக்கே இழுக்குமாகும். இந்த போக்கையே தமிழக அரசு கடைபிடித்தால், தமிழக அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்திலிருந்து அதிமுக அரசை கீழிறக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் உடனே ஜனநாயக  வழியில் தேர்தலை நடத்தி புதிய அரசை அமைக்கவும் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த மத்திய அரசுக்கு கண்டனம்!

இந்தியப் பேரரசின் 66-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் நேற்று நடைபெற்றன. 

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" பாராட்டும் நாடு இந்தியா என்பதை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரங்களை சிறப்புகளை வெளிப்படுத்துகிற அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மொத்தமே 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 13 மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்திக்கு கடந்த ஆண்டு 2வது பரிசும் கூட கிடைத்திருந்தது குறிப்பிடதக்கது.

உலகமே கண்டுகளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது பாதிக்கும் மேலான மாநிலங்களின் பங்கேற்பின்றி நிகழ்ந்திருப்பது இந்திய கூட்டாட்சித் தன்மைக்கு எதிரானது. இந்தியப் பேரரசின் இப்போக்கு கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை அனுமதி மறுக்கப்பட்ட மாநிலங்களில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம்.. வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்ற பிரிவினை எண்ணத்தைத்தான் விதைக்கும். அதுவும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, பீகார், ஒடிஷா என பல மாநிலங்கள் பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அப்படியானால் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள்தான் இந்த நாட்டின் ஒரு அங்கமா? என்ற கேள்வியையும் மத்திய அரசின் நடவடிக்கையால் எழுந்துள்ளது. அனைத்து மாநிலங்களுமே இந்தியக் கூட்டாட்சியின் ஒரு அங்கம் என்ற எண்ணத்துடன்தான் மத்திய அரசு செயல்பட வேண்டுமே தவிர இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய அரசானது இத்தகைய போக்குகளைக் கைவிட்டு அனைத்து மாநிலங்களையும் இந்திய தேசத்தின் ஒரு அங்கமாக கருதி மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Monday, January 26, 2015

இந்திய குடியரசு தின நல் வாழ்த்துக்கள் 2015

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.

1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து 1948 இல் சுதந்திரம் பெற்ற பின் 26 சனவரி நாளை குடியரசுத் தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. இந்த தினத்தையே பாரத மக்கள் அனைவரும் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Sunday, January 25, 2015

அடுத்த நாட்டு அதிபருக்கு கொடுக்கும் பாதுகாப்பு, சொந்த நாட்டு மக்களுக்கும் கொடுக்கபடவேண்டும்.

இந்தியவின் குடியரசு தின விழாவிற்கு பங்கேற்க வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா தங்கவிருக்கும் ஐடிசி மௌரியா ஓட்டலின் பாதுகாப்பு முழுவதையும், அமெரிக்க ரகசிய புலனாய்வுப் படை ஏற்றுள்ளது. அந்த ஓட்டலில், அதிநவீன கட்டுப்பாட்டு அறையையும் அமெரிக்க அதிகாரிகள் அமைத்துள்ளனர். மேலும், தில்லியில் கண்காணிப்புப் பணிக்காக நிறுவப்பட்டுள்ள சுமார் 15,000 சிசிடிவி காமிராக்களை கண்காணிக்கும் குழுவில் அமெரிக்க அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

தில்லியில் பாதுகாப்புப் பணியில், மாநில போலீஸார் 80,000 பேருடன், துணை ராணுவப் படை வீரர்கள், ஹரியாணா, ராஜஸ்தான் மாநில போலீஸார், இந்திய ரிசர்வ் படை போலீஸார் என சுமார் 20,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தும் முயற்சி நடைபெற்றால், அதை முறியடிக்கும் வகையில் முக்கியப் பகுதிகளில் "விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்' நிறுவப்பட்டுள்ளன. நெடுந்தூரம் துப்பாக்கியால் சுடக்கூடிய "ஸ்நைப்பர்ஸ்' வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானப்படை விமானங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் நாடு திரும்பும் வரை அவரின் பாதுகாப்பிற்காக பல கோடி பணம் இந்திய அரசு செலவிடுகிறது. இவரின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டுள்ள 15000 காமிராக்கள் நிரந்தரமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அகற்றபடாமல் இருக்க வேண்டும். தலைநகரிலே பெண்களின் பாதுகாப்பின்மை, கொலை சம்பவங்கள், ஆள் கடத்தலை தடுக்க இது வழிவகை செய்யும். எனவே இந்திய அரசானது சொந்த மக்களையும் கருத்தில் கொண்டு அவர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை, வரும் நிதியாண்டில் தனியாக நிதியை ஒதுக்க முன்வர வேண்டும். நிதியை ஒதுக்கி, அதை பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து 24 மணி நேரமும் கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்திய அரசை கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?

நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக்காலத்தில் முளைக்கும் காளானைப் போல், அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது.
வழக்கத்தில், இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக் குழாயில் ஏற்படுகிற பிரச்சினை. நடு நெஞ்சில் தொடங்கித் தொண்டைவரை எரிச்சல் பரவும். மருத்துவ மொழியில் இதற்கு 'இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்' (Gastro-Esophageal Reflex Disease) சுருக்கமாக (GERD) என்று பெயர்.

காரணம் என்ன?
வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக்குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது, உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.
உணவுக் குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன, மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது, அது மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடுபோல் செயல்படுகிறது.
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.
மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல 'தொளதொள'வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். 'அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.
வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.
சிலருக்கு இரைப்பையிலிருந்து ஒரு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus Hernia) உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக, உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம், உணவு, வாயு எல்லாமே உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும்.
பலருக்கு உணவைச் சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.

தூண்டும் காரணிகள்
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

என்ன முதலுதவி?
நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர் சாப்பிடலாம். புளிப்பில்லாத மோர் குடிக்கலாம். நுங்கு சாப்பிடலாம். ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம். இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட நெஞ்செரிச்சல் குறையும்.

அலட்சியம் வேண்டாம்!
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். இதற்கு இரண்டு காரணங்கள்: சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும். எண்டோஸ்கோபி / இசிஜி பரிசோதனையைச் செய்துகொண்டால் இந்தக் குழப்பம் தீரும். அடுத்து, நீண்ட நாள் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில் குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும்.
இதற்கு ‘பாரட்ஸ் உணவுக் குழாய்’ (Barrett’s Esophagus) என்று பெயர். இது ஏற்படும்போது 100-ல் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதற்கு எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சை செய்யமுடியும்.

தடுப்பது எப்படி?
நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு, ஏப்பம் வரும். சமயங்களில், ஏப்பத்துடன் 'அமிலக் கவளம்' உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும்.
வழக்கமாக, உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும். அப்போது இரைப்பையின்மேல் அழுத்தம் ஏற்பட்டால், உணவுக் குழாய்க்குள் அமிலம் செல்லும். இதைத் தடுக்க, இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.

முக்கிய யோசனைகள்
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே சில மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலது புறமாகப் படுப்பதைவிட, இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை/பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள். புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். இந்த எதிரிகளை உடனே ஓரங்கட்டுங்கள். உடல் எடையைப் பராமரியுங்கள். அப்புறம் பாருங்கள், நெஞ்செரிச்சல் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்ளும்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Sunday, January 18, 2015

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் - நாள் 18-01-2015

தமிழகம் முழுவதும் 18-01-2015 அன்று ஞாயிற்றுகிழமை 5 வயதிற்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 43 ஆயிரம்  போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு  மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 18-01-2015 அன்று ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும்.  அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதல் தவணையாக  ஞாயிற்றுகிழமையும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 22ம் தேதியும் சொட்டு மருந்து  கொடுக்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு  மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த  குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும்  குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படும். 

இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பயணம் மேற்கொள்ளும் மற்றும்  தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான  நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.  போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும்  தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

எனவே தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்போம், ஊனமில்லாத தேசத்தை உருவாக்குவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Saturday, January 17, 2015

ஜல்லிக்கட்டு மேலை கலாச்சாரமா? திருமதி.மேனகா காந்தி-க்கு கண்டனம்...

பல நூற்றாண்டுகளாக ஜல்லிகட்டை வீர விளையாட்டாக தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம். இது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகும். இதை கொச்சை படுத்துவது போல ஜல்லிகட்டு மேலை நாட்டு விளையட்டு என்றும், உச்சநீதிமன்றம் தடை விதித்தது சரி என்றும் கூறியுள்ளார் திருமதி மேனகா காந்தி. தமிழர்கள் தடையை நீக்க போராடுகின்ற நிலையில் மத்திய அமைச்சரே, இப்படி பேசியிருப்பது தமிழரின் நெஞ்சில் ஈட்டியை பாய்த்தது போல உள்ளது. அவர் இப்படி பேசியதற்கு நான் வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் பேசியதை திரும்ப பெறவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். 

பாஜக வின் அமைச்சர் இப்படி பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார். யார் பேசினாலும் தனிப்பட்ட கருத்து என்று கூறும் திருமதி தமிழிசை, பிரதமர் கூறுவதும் தனிப்பட்ட கருத்து என்று கூறுவாரா? எனவே, இது போன்ற நாடக வேலைகளில் தமிழக பாஜக மீண்டும் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...