Tuesday, January 27, 2015

சிறை குற்றவாளியை முன்னிறுத்தும் தமிழக அரசை அதிகார இறக்கம் செய்ய வேண்டும்.

நடந்து முடிந்த குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் தமிழக அரசு துறை சார்பாக தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது. இதில், காவல்துறை உள்பட 25 துறைகளின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இந்த வாகனங்களின் அனைத்திலும், சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளி ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருந்தது. இது மட்டுமல்ல, தற்போதைய முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் படம் ஒரு இடத்திலும் சிறிய வடிவில் கூட இடம்பெறவில்லை. இது அதிமுக அரசின் சர்வாதிகார அராஜக போக்கை காட்டுகிறது. இதை செயல்படுத்திய அதிமுக அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, தற்பொழுது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார். அவரின் படத்தை அரசின் பொது நிகழ்ச்சிகளில் உபயோகிப்பது அரசியல் சட்டத்திற்கே புறம்பான செயலாகும். இது அவமானகரமானது மட்டுமல்ல, இந்தியாவுக்கே இழுக்குமாகும். இந்த போக்கையே தமிழக அரசு கடைபிடித்தால், தமிழக அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்திலிருந்து அதிமுக அரசை கீழிறக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் உடனே ஜனநாயக  வழியில் தேர்தலை நடத்தி புதிய அரசை அமைக்கவும் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment