Sunday, January 25, 2015

அடுத்த நாட்டு அதிபருக்கு கொடுக்கும் பாதுகாப்பு, சொந்த நாட்டு மக்களுக்கும் கொடுக்கபடவேண்டும்.

இந்தியவின் குடியரசு தின விழாவிற்கு பங்கேற்க வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா தங்கவிருக்கும் ஐடிசி மௌரியா ஓட்டலின் பாதுகாப்பு முழுவதையும், அமெரிக்க ரகசிய புலனாய்வுப் படை ஏற்றுள்ளது. அந்த ஓட்டலில், அதிநவீன கட்டுப்பாட்டு அறையையும் அமெரிக்க அதிகாரிகள் அமைத்துள்ளனர். மேலும், தில்லியில் கண்காணிப்புப் பணிக்காக நிறுவப்பட்டுள்ள சுமார் 15,000 சிசிடிவி காமிராக்களை கண்காணிக்கும் குழுவில் அமெரிக்க அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

தில்லியில் பாதுகாப்புப் பணியில், மாநில போலீஸார் 80,000 பேருடன், துணை ராணுவப் படை வீரர்கள், ஹரியாணா, ராஜஸ்தான் மாநில போலீஸார், இந்திய ரிசர்வ் படை போலீஸார் என சுமார் 20,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தும் முயற்சி நடைபெற்றால், அதை முறியடிக்கும் வகையில் முக்கியப் பகுதிகளில் "விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்' நிறுவப்பட்டுள்ளன. நெடுந்தூரம் துப்பாக்கியால் சுடக்கூடிய "ஸ்நைப்பர்ஸ்' வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானப்படை விமானங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் நாடு திரும்பும் வரை அவரின் பாதுகாப்பிற்காக பல கோடி பணம் இந்திய அரசு செலவிடுகிறது. இவரின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டுள்ள 15000 காமிராக்கள் நிரந்தரமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அகற்றபடாமல் இருக்க வேண்டும். தலைநகரிலே பெண்களின் பாதுகாப்பின்மை, கொலை சம்பவங்கள், ஆள் கடத்தலை தடுக்க இது வழிவகை செய்யும். எனவே இந்திய அரசானது சொந்த மக்களையும் கருத்தில் கொண்டு அவர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை, வரும் நிதியாண்டில் தனியாக நிதியை ஒதுக்க முன்வர வேண்டும். நிதியை ஒதுக்கி, அதை பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து 24 மணி நேரமும் கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்திய அரசை கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment