Sunday, January 18, 2015

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் - நாள் 18-01-2015

தமிழகம் முழுவதும் 18-01-2015 அன்று ஞாயிற்றுகிழமை 5 வயதிற்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 43 ஆயிரம்  போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு  மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 18-01-2015 அன்று ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும்.  அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதல் தவணையாக  ஞாயிற்றுகிழமையும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 22ம் தேதியும் சொட்டு மருந்து  கொடுக்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு  மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த  குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும்  குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படும். 

இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பயணம் மேற்கொள்ளும் மற்றும்  தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான  நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.  போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும்  தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

எனவே தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்போம், ஊனமில்லாத தேசத்தை உருவாக்குவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment