Monday, May 13, 2019

தமிழீழ விடுதலை புலிகள் சார்ந்த முகநூல் பதிவுகளை முடக்கும் முகநூல் சமூக வலைதளத்தை இந்திய ஒன்றியத்தில் தடை செய்ய வழக்கு தொடர வேண்டும். தமிழ உணர்வுள்ள வழக்கறிஞர்களுக்கு மைக்கேல் வேண்டுகோள்!

தமிழீழ விடுதலை புலிகளையும், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களையும் உள்ளூர் தமிழர் முதல் உலக தமிழர்கள் வரை எங்கள் நெஞ்ச கூண்டில் தாங்கி நிற்கிறோம்.
தமிழருக்கெனெ ஒரு தனி நாடு தமிழீழம் அமைப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறோம். எங்கள் மண்ணில் எங்கள் சுதந்திர தமிழீழ தேசத்தை கட்டியமைத்து புலிகொடியை பறக்க விட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் தாயகத்தை மீட்டெடுக்கவே எங்கள் உணர்வுகளை வலைதளங்களில் படங்களாக, எழுத்துக்களாக பதிவிட்டு வெளிப்படுத்துகிறோம்.
தமிழர்களின் தமிழீழ தாகத்தை கண்டு பொறுக்க முடியாமல், கடந்த சில வாரங்களாகவே முகநூலில் விடுதலை புலிகள் சார்ந்த படமிட்டு தமிழர் உணர்வுகளை வெளிப்படுத்துவதை பொறுக்க முடியாத பாசிச பாசக இயக்கி கொண்டிருக்கும் இந்திய ஒன்றியம், முகநூல் நிர்வாகத்திடம் பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள் படமிட்ட பதிவுகளை தடை செய்ய மறைமுக உத்தரவிட்டதோடு தொடர்ந்து செய்தால் முகநூல் கணக்கையே முடக்க சொல்லியிருக்கிறது.
இந்த திட்டமிட்ட சமூக வலைதள தமிழின அழிப்பை தமிழர்களாக வன்மையாக கண்டிக்கிறோம்...
இந்திய ஒன்றிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான திராவிட ரத்னா வைகோ அவர்கள் விடுதலை புலிகள் இயக்கம் இந்திய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை பற்றி பேசலாம் என நீதிமன்றத்தில் வாதாடி காப்புரிமை பெற்றுத்தந்திருக்கிறார்.
ஆகவே விடுதலை புலிகளை பற்றி பேசும்போது முகநூல் நிர்வாகம் அதை முடக்கினால், பேச்சு காப்புரிமையை ஆவணமாக கொண்டு முகநூல் நிர்வாகத்தை மன்னிப்பு கோர வைப்பதோடு, தொடர்ந்து பயனர்களின் பதிவுகளை முடக்கினால், முகநூலை இந்திய ஒன்றியத்தில் தடை செய்ய, தமிழ் உணர்வுள்ள வழக்கறிஞர்கள் ஆயிரகணக்கானோர் வழக்கு தொடர்ந்து முகநூல் என்ற சமூக வலைதளத்தையே இந்திய ஒன்றியத்தில் தடை செய்து விரட்டியடித்து, தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகமும் விடுதலை புலிகளுமே என்பதை உலகிற்கு உணர்த்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த வேண்டுமென அன்போடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தணியாத தமிழீழ தாகத்தோடு,
மைக்கேல் செல்வ குமார்
13-05-2019

Sunday, April 29, 2018

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் மதிமுக வெள்ளிவிழா!

கழகத்தின் கண்மணிகளே!

திராவிட இயக்கத்தை கட்டி காத்திடும் இடத்தில் மதிமுக உள்ளது என்பதை தோழமை கட்சிகள் அறிந்து, திராவிட இயக்கத்தின் கடைசி கையிருப்பு தலைவர் வைகோ அவர்கள் செல்லுமிடமெல்லாம் மாலை, சால்வை அணிவித்து மரியாதை செய்வதை காணலாம்.

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும், அவர்களுக்கு நாம் பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டுமென்று ஜாதி, மத வேற்றுமைகளற்ற பாதுகாப்பான அரசியலை முன்னெடுப்பவர் தலைவர் வைகோ அவர்களும், மதிமுகவும்.

ஜாதி, மத கலவரங்களை தூண்டி அதன் மூலம் ஆதாயம் அடைய துடிக்கும் மத்திய மோடி அரசு, மாநிலங்களின் உரிமைகளை பறித்து மாநிலங்களை மதிக்காமல செயல்படுவதால், ஆட்சியிலிருந்தே அகற்றுவது தமிழர்களின் மிகபெரிய கடமையாகும்.

மாநில சுயாட்சியை முன்னெடுக்கும் வகையில் பல மாநில தலைவர்கள் சந்திப்பு இன்றியமையாததாகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் மத்தியில் கூட்டாட்சியை நிலைநிறுத்தி, மாநிலங்களில் சுயாட்சியை நிறுவ வேண்டிய தருணம்.

இந்நிலையில்தான் நெருப்பின் மீது தொடங்கப்பட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் வெள்ளிவிழாவை நோக்கி நகர்கிறது.

24 ஆண்டுகள் முடிவுற்று 25 ஆம் ஆண்டின் தொடக்க நாள் மே 6. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு புத்துணர்வு கொடுக்கும் விதத்தில் மதிமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ருசைல் ரவுண்டானா அருகில் உள்ள செல் பெட்ரோல் நிலையம் அருகாமையில் அமைந்துள்ள “சிம்பொனி டைன் இன்” ல் (பழைய ஸ்பைஸ் வில்லேஜ் ரெஸ்டாரண்ட்) 11-05-2018 மாலை 3 மணி அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

கழகத்தின் கொள்கைகளை உயர்த்தி பிடிக்கவும், கழகத்தின் மேல் கொண்ட பற்றுறுதியை நிலைநாட்டவும், தமிழர் உரிமைகளை மீட்கவும், கடல் கடந்து வாழ்ந்தாலும், தமிழக வாழ்வாதங்களை காக்கும் தலைவர் வைகோ அவர்களின் குரலுக்கு வலிமை சேர்க்க, ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை உறுப்பினர்கள்,  கழகத்தினர் என அனைத்து தமிழர்களும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
29-04-2018

Thursday, October 12, 2017

15 ஆண்டுகளுக்கு பிறகு செப்பனிடப்பட்ட எங்கள் கிராம சாலை!

2001 அல்லது 2002 ல் வாஜ்பாய் பிரதம அமைச்சராக இருந்த காலகட்டத்தில் போடபட்ட சாலை இப்பொழுது 15 ஆண்டுகளுக்கு பிறகு செப்பனிடப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் மகிழ்ச்சிதான். ஆனால் ஒருவகையில் பண இழப்பையும் ஏற்ப்படுத்துகிறது.

எப்படி என காண்போம்.

நான் பிறந்து வளர்ந்த பொன்னாடாம், சூரிய உதயம் காணும் எங்கள் குமரி மாவட்டத்தின், கொடுப்பைக்குழி கிராமத்தில், இப்போது போடப்பட்டிருக்கும் சாலையின் அருகே இருக்கும் வீட்டின் தரை மட்டம், இந்த சாலை செப்பனிடப்பட்டபின் தாழ்ந்துள்ளது என்பது வேதனையளிக்கிறது. சாலையிலிருந்து அண்ணாந்து பார்த்த வீடுகள், இப்போது சாலையின் மட்டத்திற்கு சரிசமமாக இருப்பது மன உழைச்சலை ஏற்படுத்துகிறது.

சாலை சீரமைப்பது, செப்பனிடுவது என்பது, பழைய சாலையின் மேல் மட்டத்தை அகற்றி விட்டு பழைய சாலை இருந்த அதே உயரத்திற்கு புதிய சாலை போடுவதுதான் சரியான விதி. அப்படி செய்தால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் தமிழகத்தில் அதற்கு மாறாக, பழைய சாலையை தோண்டி அகற்றுவதற்கு ஒதுக்கிய பணத்தை செலவளிக்காமல், அதற்கு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஏற்கனவே பழுதாகியிருக்கும் சாலையின் மேல், புதிய சாலை அமைத்துவிட்டு, அரசுக்கு கணக்கு காட்டி விடுகிறார்கள்.

இதனால் அனைத்து சாலைகளின் பக்கத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் சாலையை விட தாழ்வானதாக அமைந்துவிடுகிறது.

அப்படியானால் சாலையானது, வீட்டின் தரைமட்டத்திற்கு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது பொருள். இப்படியே போனால் இன்னும் இரண்டு, மூன்று தடவை சாலை செப்பனிடப்பட்டால் , வீட்டு தரை மட்டத்தை விட சாலை மட்டம் உயரமாக இருக்கும். இது சரியான முறை கிடையாது.

இப்படி சாலை உயரமாக இருப்பதால், மழை காலங்களில் எளிதாக மழை நீர் வீட்டினுள் வருகிறது, வீடு பாதிப்படைகிறது. எனவே வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுகிறது.

50 வருடங்களுக்கு திட்டமிட்டு கட்டும் வீடு இதே போன்று சாலைகள் அமைத்தால் 25 வருடங்களிலே இடிக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது.

இதனால் மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சிபெறும். தனி நபர் வருமானம் வெகுவாக குறையும். ஆட்சியாளர்கள் காசு சுருட்டும் நிலை ஏற்படும். இது நாட்டுக்கே பெரிய இழப்பாகும்.

இதற்கு பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களே காரணம். அவர்கள் இந்த நிலையை உணர்ந்து மக்கள் பண இழப்பை இனிமேலாவது தடுக்க தனது வீட்டுக்கும் இதே நிலைதான் என புரிந்து பொறுப்புணர்வுடன் கடைமையாற்ற வேண்டும்

இவையெல்லாம் மறுக்கப்படும் பட்சத்தில், வளருகிற தலைமுறை இளைஞர்களாவது வீதிக்கு வந்து இது போன்ற மறைமுகமான அநீதிகளை தட்டி கேட்க வேண்டும்.

கேலி கிண்டல்களை குறைத்து களத்திற்கு வர வேண்டும். அரசுகள் அடிமைகளாக இருப்பதை கண்டிக்க வேண்டும். நாம் வாக்களித்த அரசு நமக்கு நன்மை செய்யவில்லையென்றால், அரசை கவிழ செய்யும் அதிகாரம் வாக்களித்த நமக்கே இருக்க வேண்டுமென்று போராட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிபட்ட நாள் வரும்போதுதான் இந்தியா வல்லரசாகும். தமிழ்நாடு தழைக்கும்.

தமிழ்நாடு முழுதும் இதே நிலை நீடிப்பதை தடுக்க நாம் என்ன செய்ய போகிறோம்.

ஒரே வழி நல்லவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் கொடுப்பது....

சிந்திப்பீர்களா?

ஊர்பாசத்துடன்,
மைக்கேல் செல்வ குமார்

Thursday, September 14, 2017

இரண்டே நாளில் ஒட்டான்குளத்திற்கு மழை நீர் செல்லும் கால்வாயை உடைத்த விசமிகளுக்கு கண்டனம்!

2016 ஆம்வ ருடம் முதல் குமரி மாவட்டம், குருந்தன்கோடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுப்பைக்குழி ஒட்டான்குளத்தில், பருவ மழை பொய்த்து போன காரணத்தால், தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்தது. பின்னர் அடுத்த பருவ மழை வருவதற்கு முன்னதாகவே குளத்தை தூர்வாரி தயார் நிலையில் வைத்தனர் ஊர் மக்கள். 

இதையொட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு 11-09-2017 முன்னர் மழை பெய்ததால், ஆற்று கால்வாய் வழியாக ஒட்டான் குளத்த்தை மழை நீர் எட்டியது. ஆனால் இடையில் செட்டிகுளம் அருகில் ஒட்டான்குளம் செல்லும் கால்வாய் உடைப்பு ஏற்ப்பட்டு மழை நீர் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் செட்டிகுளத்திற்குள்ளும், அருகிலுள்ள கால்வாயிலும் சென்று வீணானது.

இதை கண்டறிந்த கொடுப்பைக்குழி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, உடைப்பை மண் வைத்து நிரப்பியும், கனமழை வந்தால் திரும்பவும் உடைப்பு ஏற்ப்படாவண்ணம் மணல் மூட்டைகளை அடுக்கியும் தற்காலிகமாக மழை நீரை ஒட்டான் குளத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் ஒட்டான்குளம் தொடர்ந்து மழை பெய்தால் நிரம்பும் என எண்ணி கொடுப்பைக்குழி ஊர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், 13-09-2017 அன்று சரி செய்யப்பட்ட கால்வாயில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை சமூக விரோதிகள் உடைத்தெறிந்திருந்து, ஒட்டான்குளத்திற்கு மழை நீர் வராமல் தடுத்து கொடுப்பைக்குழி மக்கள் மகிழ்ச்சியை சீர்குலைத்திருக்கின்றனர்.

இந்த சமூக சீர்கேட்டு செயல் மூலம் விசமிகள், சமூகத்திற்கு எதிராக கொடுபைக்குழி மக்கள் விழித்தெழ வேண்டுமென அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.

இதனால் மழை நீர் ஒட்டான்குளத்தில் சென்று சேர முடியாத நிலையில், ஒட்டான்குளம் மூலம் பயன்பெறும் பல ஏக்கர் தென்னை, வாழை மரங்கள் அழியும் நிலையில் இருக்கிறது. விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் இருக்கின்றனர்.

ஆகவே, இந்த சமூக சீர்கேட்டி ஈடுபட்ட விசமிகளை வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறை இந்த விடயத்தில் உடனே தலையிட்டு, உடைப்புகளை அகற்றிய விசமிகளை கண்டறிந்து தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் பஞ்சாயத்து நிர்வாகம், கால்வாயை நிரந்தரமாக நீர் செல்லும் வகையில் சரி செய்து ஒட்டான்குளத்திற்கு நீர் நிரப்பி கொடுப்பைக்குழி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தாயக பணியில்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, March 22, 2017

பரவசமான பிரசாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

2011 ஆம் ஆண்டு பரமக்குடியில் நடந்த அந்த கொடுமையான கலவரம் மதுரை வரை சங்கமமாயிருந்தது. அந்த நேரத்தில் வைகோ மதுரை சிந்தாமணி பகுதியில் பயணித்து கொண்டிருந்த போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு இளைஞன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டார். பதறிப்போனார் வைகோ.

காவல்துறையின் சில கண்மூடிதனமான போலீஸ்காரர் சுட்டதில் புஜத்திலும், மார்பிலும் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞனை, தலைவர் தாமே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 

மிகப்பெரிய மரணப்போராட்டத்திற்கு பிறகு உயிர் பிளைத்தான் அந்த இளைஞன்.  

அந்த இளைஞனே இன்னாளில் அந்த தலைவனின் நிழலாக பின் தொடருகிறான். 

ஆதலால் உலக தலைவர்கள் அறிந்துகொண்ட இளைஞன் தம்பி பிரசாந்த்.   வாழ்வின் எல்லா வளமும் புகழும் கிடைத்து பெருவாழ்வு வாழ தம்பி பிரசாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன், 
மறுமலர்ச்சி மைக்கேல்

Wednesday, March 8, 2017

மாணவர்களே! பெண்களே! திரண்டு வாருங்கள்! கச்சதீவை மீட்டு தாருங்கள்! சிங்களவனை கண்டிக்கிறேன்!

என் சொந்த நிலமான கச்சதீவை சிங்களவன் எப்படி பயன்படுத்த முடியும்.

என் நிலத்தை நான் பயன்படுத்தியிருந்தால் என் சகோதரன் சிங்களவன் குண்டு துளையுண்டு மடிந்திருப்பானா...?

ஏ தமிழினமே! எதற்காக போராடுகிறாய் என தெரியாமலே போராடுகிறாய்! நீதி வேண்டுமென்கிறாய்...

நீதியென்றால், பணமா?, துப்பாக்கி சூடு நிறுத்தமா? மீன்பிடி அனுமதியா? கச்சதீவு மீட்பா? என சரியான வரையறை இல்லாத வரை இந்த இனப்படுகொலையை சிங்களவன் தமிழினம் மீது நடத்திக்கொண்டேயிருப்பான்.

நாம் இந்தியத்திடம் நீதி கிடைக்காதா என 2 நாட்கள் ஆயிரக்கணகானோர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்போம்.

எனவே இப்படி செய்வதால், இதுவரை நமக்கான நீதி கிடைத்திருக்கிறதா என எண்ணிப்பார்த்தோமா?

ஒரே தீர்வு! கச்சதீவு மீட்புதான் என உலக நாடுகள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு,

"மாணவர்களே திரண்டு வாருங்கள். கச்சதீவை மீட்டு தாருங்கள்"

கச்சதீவை மீட்கும்போது தமிழகம் தானாக தனி நாடாகும் என உறுதியாக சொல்கிறேன்.

இல்லையென்றால் கீழே பதிந்திருக்கும் இந்த வீடியோவில் இருக்கும் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேந்த பிரிட்ஜோ என்ற மீசை எட்டிபார்க்கும் பருவத்திலிருந்த 21 வயது நிரம்பிய சகோதரனை சுட்டுக்கொன்றார்களே சிங்கள ஈன கொலையாளிகள், இதே நிலமை நமக்கும் ஏற்ப்படும். அப்போதுதான் நமக்கான வலியும் வேதனையும் தெரியும். இதை தடுக்க நீங்கள் எப்போது வீதிக்கு வரபோகிறீர்கள்.

நமக்கானது 2 நாள் ஒரு வார போராட்டம் அல்ல. உலகநாடுகள் தலையிடும் அளவிற்கான போராட்டம் வேண்டும். அதற்கு மாணவர்களும் பெண்களும்தான் முன்வர வேண்டும். இளைஞர்களும், பெரியவர்களும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

அவர்களை பாதுகாக்கும் அரணாக தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழர் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகள் அரண் அமைக்க வேண்டும்.

தொடர் போராட்டத்தில் கச்சதீவை மீட்டெடுத்து நம் சொந்த நிலத்தை ஏன் பயன்படுத்த முடியாது என உறுதிகொள்ளும் மன வலிமை ஏற்ப்படுத்துங்கள்.

நாளை நமது தமிழ்நாட்டுக்கு தனியான கொடி ஐநாவில் பறக்கும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுங்கள்.

தமிழன் உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கிறானென்றால் அவன் திறமைக்காக மட்டுமே... ஆனால் அவன் நாடு அடைய மட்டும் திறமை இல்லையா என கேள்வி கேட்டோர் செவிகளில் பறையடிக்கும் விதமாக போராடி தமிழரசு அமையுங்கள்.

தமிழினத்தை, தமிழ் மொழியை பாதுக்காக்க முன்வருவீர்கள் என்ற உயரிய எண்ணத்தில்........

தமிழ் தாயக கனவுடன்,
மைக்கேல் செல்வ குமார்