Friday, January 20, 2017

ஓமன் வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டத்தில் அடியேன்!

கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழின உணர்வோடு, தமிழர் பண்பாட்டை, தமிழர் கலாச்சாரத்தை, தமிழர் அடையாளத்தை காக்கும் விதமாக இன்று 20-01-2017 காலை 10 மணி அளவில் ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய கோரியும் ஒன்று கூடி எழுச்சி போராட்டம் நடத்தப்பட்டது.

அரபு தேசம் என்பதால் இது போன்ற எழுச்சி போராட்டங்களுக்கு அனுமதி இல்லாததாலும், உள் அரங்கத்திலே உணர்வுமிக்க இளைஞர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

500 வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஏற்ப்பாடு செய்யப்பட்ட அரங்கத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக 3000 பேருக்கு அதிகமாக தமிழ் உணர்வுள்ள தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அரங்கம் பெரிதாக இருந்ததாலும், ஓரளவு சமாளித்தாலும், கூட்டம் கட்டுக்கடங்காத காரணத்தால், தமிழின உணர்வாளர்கள் அரங்கத்தின் வெளியிலும் நின்றிருந்தனர்.

இதில் ஜல்லிகட்டு ஆதரவாக எழுச்சி முழக்கங்களையும், பீட்டாவுக்கு தடை செய்ய எதிர்ப்பு வீர முழக்கங்களையும் பெண்களும், இளைஞர்களும், சிறுவர்கள் முதல் பெரியவர்களும் முழங்கினார்கள்.

ஓமன் நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் 200 கிலோ மீட்டர், 300 கிலோ மீட்டர், 400 கிலோ மீட்டர், 500 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் தமிழர்கள் வந்து தமிழர் கலாச்சாரத்தை காக்க ஆதரவு முழக்கங்களை பதிவு செய்து இந்தியாவை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வலியுறுத்தவும், பீட்டாவை தடை செய்யவும் திரண்டிருந்தது, தமிழர் ஒற்றுமையை அரபு தேசத்திலே நிலைநாட்டப்பட்டது மகிழ்ச்சிக்குரியதே!

அடியேனும் தமிழின உணர்வோடு கலந்துகொண்டு வீரமுழக்கங்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுப்பியதும், பீட்டாவை தடை செய்ய கோரியதும் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியதென்பதை என் தமிழின உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும், காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை நீக்கும் வரையும், வாடிவாசல் திறந்து காளைகள் ஓடி வந்து ஜல்லிகட்டு நடந்து காளைகளை வீரர்கள் தழுவி வீரத்தை வெளிப்படுத்தும் வரையிலும், மேலும் ஓவ்வொரு வருடமும் தமிழர் பாரம்பரியத்தை எந்த வித தங்கு தடையின்றி எந்த வித போராட்டமின்றி நடத்த நிரந்தர அனுமதி உத்தரவை தமிழக இந்திய அரசு தரும் வரை தாய் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் போராட்டத்தை கைவிட வேண்டாம் எனவும் ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, January 14, 2017

சல்லிகட்டுக்கு ஆர்ப்பாட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் தாக்குதலுக்கு கண்டனம்! காவல்துறையை வசம் வைத்திருந்த முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி இன்று 14-01-2017 அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமனை காவல்துறையினர் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்திருக்கின்றன. இதை காணொளியாக காணும்போது தமிழினமும், தமிழனும் ஒடுக்கப்படுவதாகவே உணருகிறேன்.

என்னுடைய கேள்வி முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு... முதல்வர் அவர்களே! சல்லிகட்டை தமிழ்நாடு உறுதி செய்யும் என்று சொன்ன உங்கள் வீரவசனம் என்ன ஆயிற்று. குறைந்த பட்சம் உங்களிடம் வைத்திருக்கும் காவல் துறையையாவது அமைதியாக இருக்க வைக்க உங்களிடம் திராணி இல்லையா?

நீங்களும் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல பேசி, தமிழினத்தையே ஒடுக்க நினைக்கிறீர்களா? முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டாலே தீதும், சூதும் கை வந்த கலை என நிரூபிக்க முற்ப்படுகிறீரா?

கையாலாகாத முதல்வர் என்று நினைத்த முதல்வர் அதிரடியாக சல்லிகட்டு நடக்கும் என அறிவித்ததை வரவேற்ற 7.5 கோடி தமிழர்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு இந்த தடியடிதானா?

இதில் சாஸ்டாங்கம் விழுவதற்கு வித்தியாசமான விளக்கம் வேறு... உங்களை போன்ற அடிமைகள் அதிகாரத்தில் இருக்கும் வரை தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்கு சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.

தமிழர் பண்பாட்டுக்காக போராடிய இயக்குநர் கவுதமனை காட்டுமிராண்டி போல இழுத்து அங்குமிங்குமாக அலைகழித்து அடித்து துன்புறுத்திய தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காட்டுமிராண்டிதனமாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தடியடி நடக்க காரணமாயிருந்த, காவல்துறையை தன் வசம் வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழர்களை, பண்பாட்டை கலாசாரத்தை, உணர்வுகளை ஒடுக்க நினைத்த தமிழக முதல்வர் தனது வாக்கை காப்பாற்றாமல் துரோகம் இழைத்த காரணத்தால் தார்மீக உணர்வின் அடிபடையில் தனது இயலாமையை ஒப்புகொண்டு பதவி விலக வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

தமிழர்கள் வரும் காலங்களிலாவது இப்படிபட்ட துரோகங்களை தேர்தல் காலங்களில் நினைத்து பார்த்து தன்மானமுள்ளவர்களை, தமிழினத்தையும், தமிழர் நலன் காக்கிறவர்களை இனம் கண்டு வெற்றியடைய செய்து தமிழினத்தை இப்படிபட்ட துரோகங்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு தமிழனாக,
மைக்கேல் செல்வ குமார்

Friday, January 13, 2017

பீட்டா (PETA) அமைப்புக்கு மைக்கேல் எதிர்ப்பு! சல்லிகட்டுக்கு ஆதரவு! பொங்கல் வாழ்த்து!

பீட்டா (PETA) அமைப்பிற்கு எதிராகவும், அந்த அமைப்பை இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டுமெனவும், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிகட்டுக்கு ஆதரவாகவும், இன்று 13-01-2017 ல் PETA என எழுதி அதை எதிர்க்கும் விதமாக அமைதியான முறையில் எரித்து போராட்டம் நடத்தினேன்.

சகோதரர் ராஜ்மோகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த போராட்டம் நாடுகடந்தும் அமைதியாக நடந்தேறியுள்ளது.

இந்த ஆண்டு கண்டிப்பாக தமிழர்களின் அடையாளமான சல்லிகட்டு நடத்தப்பட வேண்டும். இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டு மக்களின் மன நிலையை புரிந்துகொள்ளாமல், ஏதேச்சாதிகரமாக நடத்துமானால், தமிழக முதல்வர் கூறியபடி சல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு அரசு இருப்பதால் நாம் தடையை மீறி நம் கலாச்சார பண்பாட்டை காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எனவே நாம் இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாக பீட்டா (PETA) அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பீட்டா (PETA) என எழுதி அதை எரித்து தமிழர்களான உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள்.

சல்லிகட்டை நடத்தி தமிழர் வீரத்தை பறைசாற்றுவோம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மறுமலர்ச்சி மைக்கேல் 

Friday, January 6, 2017

பள்ளி கல்லூரிகளில் வாரம் ஒருமுறை வேட்டி கட்டாயமாக்க தமிழக அரசுக்கு மைக்கேல் வேண்டுகோள்!

வேட்டி தினம்... தமிழர்களின் அடையாளம் வேட்டி, நமது பாரம்பரிய அடையாளத்தை சில வருடங்களுக்கு முன்பு தொலைத்துவிடுவோமோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றியதுண்டு... ஆனால் முதன் முதலாக என தாத்தாவின் வேட்டையை கட்டி மகிழ்ந்த தினம் இன்னமும் பசுமரத்தாணி போல நினைவலைகளாக எண்ணும் போது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழின், தமிழரின் நாகரீகத்தின் அடையாளமாகவும் வேட்டி திகழ்கிறது. இதை வருங்கால தலைமுறைக்கும் எடுத்து செல்ல வேண்டும். இப்போதைய கால சூழலில் சில ஓரிரு பள்ளிகளில் வேட்டியை சீருடையாக வைத்திருக்கிக்கிறார்கள் என சில மாதங்களுக்கு முன் கேள்விபட்டு அந்த புகைப்படங்களை பார்த்தது மனதில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இனி வரும் காலங்களில் அனைத்து கல்லூரி பள்ளிகளில், தமிழர் பண்பாட்டை காக்கும் விதமாக, ஒரு வாரத்திற்கு ஒரு நாள் கட்டாயம் வேட்டியணிந்து வர தமிழக அரசு ஏற்ப்பாடுகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, இந்த நாளை அனைத்து தமிழர்களும், அனைத்து இந்திய மக்களும் கொண்டாடி மகிழ வேண்டுமென்று, தமிழர் பண்பாட்டை காக்கும் இந்த வேட்டி தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

Saturday, December 10, 2016

குழந்தைகளுக்கு ஆதார் அட்டை! கொடுப்பைக்குழி பள்ளிகூடத்தில் முகாம்!

7 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக புகைபடத்துடன் தகவல் சேகரிக்க இன்று 10.12.2016 சனிக்கிழமை அதிகாரிகள் கொடுப்பைக்குழி அரசு தொடக்கப் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.

குழந்தைகள் 5 வயதுக்கு குறைந்தவர்களாக இருப்பதால், விரல் ரேகை பதிவு போன்றவை பெற்றோருடையது மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் புகைப்படம் மட்டும் குழந்தையுடையதை பயன்படுத்தப்படும்.

எனவே குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் ஆதார் அட்டைகளுடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து செல்லுங்கள்.


இடம்: அரசு தொடக்கப்பள்ளி,கொடுப்பைக்குழி.
நாள்: 10.12.2016 சனிக்கிழமை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
தகுதியுள்ளோர்: 7 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் மட்டும்.
குறிப்பு: குருந்தன்கோடு பஞ்சாயத்திற்குட்படாத பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடையலாம்.


தகவல்: Dr. ராஜா - கொடுப்பைக்குழி

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

Tuesday, December 6, 2016

புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களை தொடர்ந்து அந்த வெற்றிடத்தை ஓ.பன்னீர் செல்வம் பூர்த்தி செய்து 26-12-2016 ல் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக மக்களில் ஒருவனாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமிழக மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தரவும், மக்களின் மன நிலையை அறிந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், நேர்மையாகவும், சேவை எண்ணத்தோடு செயலாற்றவும் வேண்டுகிறேன்.

மைக்கேல் செல்வா குமார்.

Monday, December 5, 2016

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இன்று 05-12-2016 இரவு 11.30 மணி அளவில் மறைந்தார் என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 68 வயதான அவர் தன்னுடைய அதீத தைரியத்தால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழீழம் மலர பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றியவர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தொடுத்தது போரல்ல, இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றினார். 7 தமிழர்கள் விடுதலைக்கும் போராடியவர். பல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியவர்.

தமிழக மக்களுக்கு ஒரு சாதனை பெண்மணியாகவே திகழ்கிறார். எவ்வளவு விமர்சனம் அவர் மீது வைத்தாலும், ஒரு பெண்மணியாக திறமையான நிர்வாகியாக அவர் மீது பெண் என்ற அடிப்படையில் ஒரு மதிப்பு உண்டு.

முதலமைச்சர் இழப்பு தமிழக மக்களை சோகத்தி ஆழ்த்தியிருப்பது நிதர்சனம்.
மறைந்த ஜெயலலிதா அவர்கள் உடலுக்கு தமிழக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த இருக்கின்ற வேளையில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக தொண்டர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மைக்கேல் செல்வா குமார்.