Wednesday, November 18, 2015

கடலூரை கண்டமாக்கிய வெள்ளப்பெருக்கு! தமிழக அரசு நிவாரணப் பணிகளை துரிதபடுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்!

கடந்த ஒரு வாரமாக கடலூர் மாவட்டம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது என்றே சொல்லலாம். தொடர் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கால் அனைத்து சாலை வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், வெள்ளப்பெருக்கால் மனித உயிர்கள் வெளியில் செல்ல முடியாமலும், மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டும் 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல மக்கள் வீடுகளை மழை நீர் அடித்து சென்றுள்ளதால் உணவிற்கும், உடை இல்லாமலும், தங்க வசதிகளற்றும் அவதிப்படுகின்றனர்.

இந்த இயற்கை சீற்றத்தால் இயற்கை வளங்கள் அழிந்து நாசமாயின. ரயில் தண்டவாளங்கள் மண்ணரிப்பால் தொங்கி காணப்படுகின்றன. வீடுகளில் உள்ள கால்நடைகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்துவிட்டன.

பெருவெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டும், ஆற்றுப்பாலங்கள் பேருந்துகள் செல்லமுடியாதவாறு அடித்து செல்லப்பட்டும் உள்ளன. கடலூர் மாவட்டமே மழை நீரால் பாதிப்படைந்துள்ளது வெளிப்படுகிறது.

எனவே கடலூர் மாவட்டை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும். மருத்துவ வசதியை தமிழக அரசு முழுமையாக எந்தவித தொய்வில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு முகாம்கள் ஏற்ப்படுத்திகொடுத்து உணவிற்கு வழிவகை செய்திட வேண்டும். பாதிப்படைந்த விளை நிலங்களான, நெல், கரும்பு, வாழை, கிளங்கு மற்றும் ஏனைய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, விலங்கினங்களை வளர்த்து அதன் மூலம் தன் வாழ்வை வாந்த்துகொண்டிருந்த குடும்பங்கள் வளர்த்த கால்நடைகளை இழந்து தவிக்கிறார்கள். வாழ வழியில்லாமல் அல்லலுறுகிறார்கள். எனவே இறந்த ஆடு, மாடு, கோழி போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்திட வேண்டுமென்றும் வேண்டுகிறேன்.

பல அரசியல் தலைவர்கள் கடலூர் மாவட்டத்தை பார்வையிட்டு, வைகோ போன்ற தலைவர்கள் முகாமிட்டு உணவு வழங்கி மக்களை பசியாற்றினார்கள். இப்போது தமிழக அரசும் நிவாரண பணிகளை மேற்கொள்கிறது. ஆனால் பணிகளை துரிதப்படுத்தி, அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் கிடைக்க வழிசெய்திடவேண்டும். மேலும் படிப்படியாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைத்து தண்ணீரும் வெளியேறியதும், அவர்களது வீடுகளை சரி செய்யவும், வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு வீடுகளை தமிழக அரசே ஏற்று கட்டி கொடுத்து மக்களை காக்க வேண்டுமெனவும், வரும் காலங்களில் இது போன்ற பெரு மழையிலிருந்து மக்களை காக்க நீர்நிலைகள், ஆறுகள், குளங்களை தூர்வாரியும், புதிய அணைகளை அமைத்தும் நீரை சேகரித்து வளமாக்கவும் தமிழக அரசு திட்டங்களை தீட்டி மக்கள் நலனில் அக்கரை செலுத்தி நல்லாட்சி செய்யவேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment