தமிழகத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் சொர்க்க பூமியாம் கன்னியாகுமரி மாவட்டத்தின், குருந்தன்கோடு பஞ்சாயத்துக்குட்பட்ட கொடுப்பைக்குழி கிராமத்தில் மக்கள் அனுதினமும் குளிக்கும் ஒட்டான்குளத்தின் மிக அருகில் பஞ்சாயத்து அனுமதியோ, சுகாதார துறைஅனுமதியோ இல்லாமல் சட்ட விரோதமாக கடந்த ஆண்டு 1.5.2014 முதல் சுகாதாரமற்ற தொற்று நோயை உண்டாக்கும் தனியாரின் பன்றி பண்ணை செயல்பட்டு வருகிறது. இதனை கேள்விபட்டவுடன் அந்த சுற்று வட்டார பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவரிடம் உடனடியாக இங்கிருந்து பன்றி பண்ணையை அகற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அதற்கு பஞ்சாயத்து தலைவர் ஒரு வாரத்தில் மாற்றி விடுவேன் என்று பொதுமக்களிடம் கூறினார். ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் மாற்றாமல் கொடுப்பைக்குழி ஊரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சொந்த ஊர் மக்களையே ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
இவரின் குணாதிசயங்களை உணர்ந்த மக்கள் இது வரை 28 மனுக்கள் கொடுத்துள்ளனர். இதில் குமரி மாவட்ட ஆட்சியருக்கு 6 மனுக்களும், பஞ்சாயத்து தலைவர் மதிப்பிற்குரிய திரு.வைகுண்டமணி அவர்களுக்கு 3 மனுக்களும் அடங்கும். பலமுறை பொதுமக்களாக சேர்ந்து பன்றி பண்ணையை மாற்ற வலியுறுத்தியும் மாற்றாத பஞ்சாயத்து நிர்வாகம், மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 12.11.2014 அன்று கொடுப்பைகுழி வட்டார பொதுமக்கள் பெருந்திரளாக உண்ணாவிரதமிட திட்டமிட்டிருந்தனர். இந்த தகவலறிந்த பஞ்சாயத்து தலைவர் வரும் 18.11.14 ம் தேதி கண்டிப்பாக பன்றி பண்ணையை மாற்றி விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்தார். ஆனால் உறுதியளித்ததின் படி 18.11.14 அன்று பன்றி பண்ணையை மாற்றி தராமல் அன்றும் பொதுமக்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பன்றி பண்ணையை மாற்றாத பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கடந்த 24.11.14 அன்று 300 பேருக்கு மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பன்றி பண்ணையை அகற்றக்கோரி குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு.J.G.பிரின்ஸ், குருந்தன்கோடு ஊராட்சி மன்ற பெருந்தலைவர் திரு.K.T.உதயம், அவர்கள் முன்னிலையிலும், கொடுப்பைக்குழி ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் திரு.ராஜன் அவர்கள் தலைமையிலும் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து 13.12.14 க்குள் பன்றி பண்ணையை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவருக்கு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பன்றி பண்ணையை மாற்ற வேண்டிய 13.12.14 அன்று பன்றி பண்ணையை அகற்ற முன்னின்று போராடிய இளைஞர்களை பன்றியை கொன்றதாக இரணியல் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பொய் வழக்கு புனையபட்ட இளைஞர்கள் ஜாமினில் வெளி வந்துள்ளனர். மேலும் பன்றி பண்ணையை அகற்றப்போராடிய இளைஞர்கள்,பொதுமக்கள் மீதும் பழி தீர்ப்பு மற்றும் பன்முக அடக்கு முறைகளில் இனந்தெரியாத நபர்கள் ஈடுபடுகிறார்கள்.
பொதுமக்களுக்கு தொற்று நோய் உண்டாக்கும் பன்றி பண்ணையை மாற்றாததால் எங்கள் பகுதி மக்கள் பல வித தொற்று நோயால் பாதிக்கபட்டள்ளனர். மேலும் இந்த பன்றி பண்ணை எங்கள் ஊரில் வருவதற்க்கும், பொய் வழக்கு பதிவு செய்வதற்க்கும், இன்று வரை பன்றி பண்ணை மாறாமல் இறுப்பதற்கும் கொடுப்பைக்குழி ஊரைச் சார்ந்த, குருந்தன்கோடு பஞ்சாயத்து தலைவரே காரணம் என அனைத்து பொதுமக்கள் மத்தியிலும் செய்திகள் உலா வருகிறது. பஞ்சாயத்து தலைவரே பன்றி பண்ணை உரிமையாளருக்கு ஆதரவாகவும் செயல் படுவதாக தகவல்கள் வருகின்றன.
இந்த செய்தி பஞ்சாயத்து தலைவருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில், பஞ்சாயத்து தலைவர் அவர்கள் உடனடியாக இதுபோன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் நலன் பேண பாடுபட வேண்டுமென கேட்டுகொள்கிறேன். மேலும் இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பஞ்சாயத்து தலைவர் திரு.வைகுண்டமணி அவர்களை ஒழுங்கீன முறையில், பொதுமக்களின் வாழ்வை சீரழிப்பு என்ற முறைகேட்டின் அடிப்படையில், பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடவேண்டுமென்று வலியுறுத்தி, சுகாதார கேடு விளைவிக்கும் பன்றி பண்னையை போர்க்கால அடிப்படையில் அகற்றி கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்களை தீய நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்.
No comments:
Post a Comment