Friday, November 11, 2016

15 பவுன் நகை, ₹10000 கொள்ளை-மைக்கேல் செல்வ குமார் வீட்டில் பேரிச்சம் பழம் தின்றுவிட்டு கொள்ளையடித்த நூதனம்!

கன்னியாகுமரி மாவட்ட தலைநகராம் நாகர்கோயில், பார்வதிபுரம் அருகே கணியாகுளம் வசந்த் நகரில் எனது இல்லம் அமைந்துள்ளது. வீட்டில் கடந்த சில நாட்கள், வெளியில் சென்று இன்று 11-11-2016 மாலை 4 மணி அளவில் இல்லம் திரும்புகையில் இரும்பு கிரில் கேட் திறந்து உள்ளே நுளையும் போது மேஜையானது, போடபட்ட திசையிலிருந்து வேறு திசையில் கிடந்திருக்கிறது. மின் விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதை பார்த்து திடுக்கிட என் வீட்டினர், சந்தேகம் ஏற்ப்பட்டு ஓமனிலிருக்கும் எனக்கு அலைபேசியில் அழைத்தனர். அதே வேளையில் பயம் காரணமாக வீட்டினுள்ளே செல்லாமல் பக்கத்து வீட்டார்களையும் அழைத்து அவர்களுடன் வீட்டின் அறையினுள் செல்ல திருடர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே வந்திருப்பது ஊர்ஜிதம் ஆனது. 

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து அதை கவனித்து, வீட்டு ஜன்னல் கதவை உடைத்து எடுத்துவிட்டு, அதன் உள்பக்கமிருக்கும் இரும்பு கிரிலை சதுர வடிவில், வெட்டி எடுத்து வீட்டினுள்ளே சென்றுள்ளனர் திருடர்கள், வீட்டிலிருந்த பேரிச்சம் பழங்களையும் தின்று விட்டு, சமயலறையிலும் அனைத்து பாத்திரம் மற்றும் டப்பாக்களை திறந்து பார்த்து காசு பணங்களை கிடைத்ததை எடுத்துள்ளனர்.

வீட்டின் அனைத்து அறைகளுக்கும் சென்று பணம் நகைகளை தேடி, அலமாரிகளை திறந்து அலமாரியின் டிராயர்களை கீழே எடுத்து கட்டிலில் வைத்து நிதானமாக தேடி 15 பவுன் நகை மற்றும் ₹10000 பணத்தையும் எடுத்துவிட்டு, என் மகனின் கடவு சீட்டு, என்னுடைய வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி டெபிட் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களையும் கட்டிலில் வீசிச் சென்றுள்ளனர். அலங்காரம் அமைப்புக்களில் இருந்த புகைப்படங்கள் போன்றவற்றையும் வீட்டினுள் வீசியெறிந்துள்ளனர்.

வித விதமாக சேகரித்து வைத்திருந்த இந்திய ₹1, ₹2, ₹5, ₹10 பழைய நோட்டுகளும், பல அந்நிய நாட்டு பண நோட்டுகளையும்  எடுத்து சென்றுள்ளனர்.

இந்த திருட்டு கடந்த நான்கு தினங்களுக்குள் (08, 09, 10-11-2016) நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் வீட்டில் போடப்பட்டிருந்த விளக்குகள் அப்போதுதான் அணைக்கப்பட்டுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்கள் வீட்டு விளக்கு அணைந்திருக்கிறது என்று அலைபேசியில் அழைத்து சொல்லியதும், பீஸ் போயிருக்கும், வரும் போது மாற்றிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள் என் வீட்டில். ஆனால் இன்று வீட்டிற்கு வந்த பின்புதான் வெளி விளக்கு சுவிட்ச் வீட்டினுள் அணைக்கப்பட்டிருந்திருக்கிறது கண்டுபிடிக்கபட்டது.

உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்க, மாவட்ட துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளர், புலன் விசாரணை குழுவினர் உள்ளிட்ட காவல் துறையினர் வந்து கொள்ளை நடந்த இடம் மற்றும் எப்படி நடந்திருக்கும் என ஆய்வு செய்து புகைபடங்கள் எடுத்துசென்றுள்ளனர். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர்தான் வீட்டு நாய் இறந்தது. அதை விசம் வைத்து கொலை செய்திருந்தார்கள். அந்த அதிர்ச்சி தீர்வதற்கு முன்னே இந்த திருட்டு நடந்துள்ளது. இதை வைத்து பார்க்கும்போது திருடர்கள் திட்டம் தீட்டிதான் இந்த அபார கொள்ளையை நிறைவேற்றியிருப்பார்கள்.

ஜனநாயகத்தின் தூண்களாக நான் என்னாளும் மதிக்கின்ற பத்திரிகையாளர்களும் என்னுடைய மற்றும் என் நண்பர்களுடைய அழைப்பை ஏற்று உடனடியாக வந்து தகவல் சேகரித்திருக்கிறார்கள், மட்டுமல்லாது நாளை அனைத்து நாளேடுகளிலும் செய்தி வரும் என்று தகவலும் தந்திருக்கிறார்கள். அழைத்த உடன் வந்த காவல் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாளை 12-11-2016 காலை எழுத்துபூர்வமாக வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எங்கள் வீட்டு நபர்கள் கைரேகைகளையும் நாளை சேகரிப்பார்கள்.

திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை காவல்துறை கண்டுபிடித்து எங்களிடத்தில் ஒப்படைக்க வேண்டுமெனவும், சரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமெனவும், சுற்று புறத்தில் இருக்கும் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டுகிறேன்.

அன்புடன்,
மைக்கேல் செல்வ குமார்

No comments:

Post a Comment