தமிழ் மற்றும் எந்த புதிய மொழியையும் மத்திய ஆட்சி மொழியாக சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது தமிழ் மக்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது..
இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற மேல்சபையில் இன்று காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தமைக்கு அவருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இதை தாங்கள் மந்திரியாக இருக்கும்போதே நிறைவேற்றியிருந்தால், அப்போதைய காங்கிரஸ் தலமையிலான மத்திய அரசு தமிழையும் ஆட்சி மொழி என அறிவிக்க வாய்ப்பாக இருந்திருக்கும் என்பதையும் நினவுபடுத்துகிறேன்..
தமிழை ஆட்சி மொழி கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்ட மத்திய உள்துறை துணை மந்திரி ஹரிபாய் பராத்திபாய் சவுத்ரி, இந்த முடிவை ஏற்றுக் கொள்வதானால் அரசியலமைப்பு சட்டத்தின் 346-வது பிரிவில் திருத்த வேண்டிவரும். இதே கோரிக்கையை முன்வைத்து, தங்கள் பிராந்தியத்தின் மொழியையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மற்ற மாநிலங்களும் அழுத்தம் தர நேரிடும் என கூறி உலகமே போற்றும் தமிழை தட்டி கழித்துள்ளார்.
உலகம் தோன்றிய காலத்தே தொன்று தொட்டு தமிழ் மொழி வழக்கத்திலிருக்கிறது என்பதை தமிழின தலைவர்கள் பாராளுமன்றத்தில் உரைகளாகவே அளித்துள்ளனர். தமிழ் மொழி அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானதால், அதை ஆட்சி மொழியாக்கினால் பாரத்தின் தேசிய மொழி ஆக்கிவிடுவார்களோ என்ற கசப்பு மனப்பான்மையில் மத்திய மந்திரி இதை மறுத்துள்ளார் என தெளிவாகிறது.
தமிழ் மொழிக்கென்று தனி வரலாறே இருக்கிறதே... உலகின் முதல் கப்பல் படையை கட்டி நிறுவிய மன்னன் போற்றிய தமிழ் மொழிக்கே ஆட்சி மொழி அந்தஸ்து இல்லாதது தமிழர்களிடையே மிகுந்த மன வேதனையான விடயமே... இதுவே தமிழன் இன்னும் அடிமையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்பதற்கு ஒரு பெரிய சான்றுமாகும்.
எனவே உலகின் மிக பழமையான உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த தமிழை ஆட்சி மொழியாக்க, மந்திரிசபை கூடி பரிசீலித்து ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்...
No comments:
Post a Comment